Rain Update: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு இதுதான்......!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 13 செமீ மழையானது பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 -ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இதன் தமிழகத்தில் அதிகனமழைக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE
அதிகனமழைக்கான எச்சரிக்கை:
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
28-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன - மிக கனமழை பெய்யக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
27-11-2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-11-2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
27-11-2024: சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-11-2024: சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மழையளவு
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 13 செமீ மழையும், குறைந்த அளவாக 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை - 123.90 மில்லி மீட்டர், சீர்காழி -107.20 மில்லி மீட்டர் தரங்கம்பாடி - 102.60 மில்லி மீட்டர், கொள்ளிடம் - 100.20 மில்லி மீட்டர், மணல்மேடு 82 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 58.80 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 95.98 மில்லி மீட்டர் (10 செமீ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 574.70 மில்லி மீட்டர் ( 58 செமீ ) ஆகும்.