மயிலாடுதுறை ரயில் பயணிகள் கொண்டாட்டம் - காரணம் என்ன?
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய விரைவு ரயில் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடிய வகையில் இன்று முதல் தனது சேவையை துவங்கியுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய விரைவு ரயில் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடிய வகையில் இன்று முதல் தனது சேவையை துவங்கியதை அடுத்து ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.
ஏழு நாட்களும் செல்லும் ரயில் வண்டி
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில் கும்பகோணம் , பாபநாசம் , தஞ்சாவூர் மார்க்கமாக திருச்சிக்கு காலை 10.25 மணிக்கு சென்றடையும். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த ரயிலை அனைத்து நாட்களும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் உட்பட பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே நேற்று வாரத்தில் ஏழு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான துவக்க விழாவும் நடைபெற்றது.
நாட்கள் அதிகரிக்கப்பட்ட ரயில்
அதனைத் தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கி வந்த இந்த ரயில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் செல்லும் வகையில் சேவையை துவங்கியது. அதுமட்டுமின்றி மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரையிலான மைசூர் விரைவு ரயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறை - திருச்சி செல்வதற்கு ஏதுவாக பிரத்தியேகமாக ரயில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் உற்சாகம்
தொடர்ந்து சேவையை தொடங்கிய முதல் நாளான இன்று ரயில் பயணிகள் சங்கத்தினர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தற்போது இயங்கி வரும் இந்த ரயிலை விழுப்புரம் வரை நீட்டித்து திருச்சி வரை இயங்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.