இலவச பருத்தி விதையால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் - சீர்காழி அருகே சோகம்
சீர்காழி தாலுக்காவில் தனியார் நிறுவனம் வழங்கிய பருத்தி விதையை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய மகசூல் தராததால் விதை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சீர்காழி சுற்றுவட்டார பகுதி பல்வேறு கிராமங்களில் தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய பருத்தி விதையை பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு பருத்தி உரிய மகசூல் தராததால் விதை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா கடைமடை பகுதியாகும் இங்கு சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், நெல், கரும்புக்கு அடுத்து பருத்தி அதிகளவில் சாகுபடி நடைபெற்றது.
பருத்தி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசன்குப்பம், எருமல், எடக்குடி வடபாதி, சாந்தபுத்தூர், கொண்டத்தூர், தொக்கலாக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் விதைகளுக்கு பதில் இந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் (சவுத் இந்தியா சீட்ஸ்) வழங்கிய பருத்தி விதையினை பயிரிட்டனர்.
அனைவருக்கும் சான்றிதழ்; பள்ளி மாணவர்களுக்கு நடன, இசை, ஓவிய போட்டிகள்- பங்கேற்பது எப்படி?
இலவச பருத்தி விதை
இந்நிறுவனம் பருத்தி விதையை இலவசமாக வழங்கியதுடன், விளையும் பருத்தி மற்றும் அதன் விதைகளையும் தாங்களே நல்ல விலைக்கு கொள்முதல் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தனர். மேலும் இந்த ரக பருத்தி 1 ஏக்கருக்கு 25 குவிண்டால் வரை பருத்தி மகசூல் கிடைக்கும் என தெரிவித்ததால் அதனை நம்பி விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் பருத்தி பயிரிட்டனர்.
முதலமைச்சரின் புதிய முதன்மை தனிச்செயலாளராக உமாநாத் நியமனம் - தலைமைச் செயலாளர் அதிரடி
அதிர்ச்சியடைந்த விவசாயிகள்
செடிகள் நல்ல செழிப்புடன் வளர்த்த நிலையில், அதில் போதிய காய்ப்பு தன்மை இல்லாததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்த விவசாயிகள் போதிய மகசூல் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்த நிறுவன ஊழியர்கள் சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர், ஆனால் அதனை இட்டும் பருத்தி செடிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இழப்பீடு வழங்க கோரிக்கை
ஏக்கர் 1 -க்கு 25 கிலோ முதல் 300 கிலோ வரை மட்டுமே பஞ்சு கிடைத்ததால் விரக்தியடைந்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி தனியார் விதை நிறுவனத்தை வலியுறுத்தினர். முதலில் 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்த விதை உற்பத்தி நிறுவனம் ரூபாய் 25 ஆயிரம் மட்டும் வழங்கிவிட்டு தங்களை அலக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அரசு வேளாண் கல்லூரி அதிகாரிகள் குழு பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு தங்களுக்கு ஒருபோக பருத்தி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், தனியார் நிறுவத்தில் இருந்து உரிய இழப்பீட்டை பெற்று தரவும், பாதிக்கப்பட்ட பருத்திக்கு அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.