மீண்டும் திறக்கப்படும் மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் - அமைச்சர் சொன்ன புதிய தகவல் இதுதான்..!
வெளிமாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நெல் கொள்முதல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், போக்குவரத்து உயிர்நாடியாகவும் விளங்கும் மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான சாலையில் காவேரி நகர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாரங்கபாணி இரயில்வே நினைவுப் பாலம் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலம் சீரமைப்புப் பணிகளை 45 தினங்களுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ரூபாய் 6 கோடி செலவில் பாலம் புதுப்பொலிவு பெற இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த சாரங்கபாணி பாலம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் போக்குவரத்து வரலாற்றில் சாரங்கபாணி இரயில்வே மேம்பாலம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை வகிக்கிறது. இது மயிலாடுதுறை நகரம் மற்றும் மாவட்டத்தின் தெற்குப் பகுதியை இணைக்கும் மிக முக்கியமான பாலம் ஆகும். நகரில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி இந்தப் பாலத்தையே கடந்து செல்கின்றன.

செய்தியாளர்களிடம் அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்
"மயிலாடுதுறையின் அடையாளமாக இருக்கின்ற சாரங்கபாணி இரயில்வே மேம்பாலமானது தற்போது பழுதடைந்து காணப்பட்டது. பாலத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக, அது விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இந்தப் பாலத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இடமும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் இடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் இடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.
6 கோடி ரூபாயில் மராமத்து பணிகள்
அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. பாலத்தின் மராமத்து மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக உடனடியாக ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. "இப்பாலத்தைப் பொறுத்தவரையில், இது 1974-ஆம் ஆண்டு கலைஞரின் முயற்சியால் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலத்தைக் கடந்திருக்கும் இந்த இரயில்வே மேம்பாலத்தில் பல கோடிக்கணக்கான வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றிருக்கின்றன. இந்தப் பாலம் தற்போது மேற்கொள்ளப்படும் மராமத்து பணிகள் மிகவும் முக்கியமானவை. விபத்துகள் ஏதும் நிகழாத வண்ணம், தரமாகவும், விரைவாகவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலத்தின் மறுசீரமைப்பு விவரங்கள்
சீரமைப்புப் பணிகளின் போது மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். மராமத்து பணிகளின் ஒரு பகுதியாக, "பாலத்தில் உள்ள தூண்களை புதியதாக மாற்றப்பட உள்ளது. மேலும், பாலத்தின் இரண்டு பக்க கைப்பிடிகளும் (Parapet walls) புதியதாக அமைக்கப்பட உள்ளன. பாலத்தின் மேற்பரப்பில் உள்ள சாலைத் தளமும் புதுப்பிக்கப்படும். இதனால் பாலம் உறுதியாகவும், அழகாகவும் மாறும்," என்று அமைச்சர் உறுதியளித்தார்.
45 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு
இந்தப் பாலத்தின் சீரமைப்புப் பணிகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. "இப்பணிகள் அனைத்தும் வரும் 45 தினங்களுக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு இந்த இரயில்வே மேம்பாலம் மீண்டும் அவர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் போக்குவரத்து தடை நீங்கி, மக்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

தற்காலிகப் பாதை மற்றும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள்
பாலம் சீரமைப்புப் பணிகள் நடக்கும்போது பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. "மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்வதற்காக ஒரு தற்காலிக பாதை அமைத்துத் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.
மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 15-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை, "ஒருவழிப் பாதையில் மட்டும் வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் இந்த தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கவனம்
இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் குறித்தும் அமைச்சர் கூறுகையில், "வெளிமாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நெல் கொள்முதல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளின் நலன் கருதி, வெளிமாநில நெல் வரத்து முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, உறுதி அளித்தார்.
ஆய்வில் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்
அமைச்சரின் இந்த முக்கிய ஆய்வின்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் ஆய்வுப் பணிகளில் பங்கேற்று, பணிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.






















