Taliban Warns Pakistan: இந்திய மண்ணிலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை; தாலிபான் வெளியுறவு அமைச்சரின் மெசேஜ் என்ன.?
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தகி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். அவர் சொன்னது என்ன தெரியுமா.?

ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள அமிர் கான் முத்தகி, முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். இங்கு பேசிய அவர், அமைதிக்காக தாங்கள் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் அழித்ததாகவும், அதேபோல் பாகிஸ்தானும் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியதன் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.
பாகிஸ்தானுக்கு அமிர் கான் முத்தகியின் அட்வைஸ் என்ன.?
6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தகி, டெல்லியில் நேற்று இரவு செய்தியாகர்களை சந்தித்தபோது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்கள் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து செயல்பட்டு வந்ததாகவும், ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், தாலிபான்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதோடு, தாங்கள் செய்ததுபோல், பாகிஸ்தானும் அதே அமைதிப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முன்பு ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி செயல்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்தகி, "அவர்களில் ஒருவர் கூட ஆப்கானிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குல நிலம் கூட அவர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. 2021-ல் நாங்கள் எந்த நடவடிக்கையை மேற்கொண்டோமோ, அந்த ஆப்கானிஸ்தான் உருமாறியுள்ளது," என்று கூறினார்.
மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மண்ணிலிருந்து பாகிஸ்தானுக்கு அவர் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது, "ஆப்கானிஸ்தான் அமைதிக்காகச் செயல்பட்டது போல, மற்ற நாடுகளும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகச் செயல்படட்டும்." என்பதுதான் அது.
காபூல் குண்டுவெடிப்பு - பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
காபூலில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு பற்றிய கூறிய முத்தகி, இந்த செயலை பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டினார். "தொலைதூரப் பகுதிகளில் எல்லைக்கு அருகில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலை நாங்கள் தவறாகக் கருதுகிறோம். பிரச்னைகளை இப்படி தீர்க்க முடியாது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் தங்கள் பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. யாருக்கும் இதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. ஆப்கானிஸ்தான் இப்போது ஒரு சுதந்திர நாடாக உள்ளது என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
மேலும், ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். "யாராவது இதைச் செய்ய விரும்பினால் (ஆப்கானியர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்த), அவர்கள் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேட்க வேண்டும். ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்கள் விளக்குவார்கள்" என்று முத்தகி கூறினார்.
“இந்தியா நெருங்கிய நட்பு நாடு“
இந்திய உறவுகள் குறித்துப் பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு , உதவிக்காக முதலில் அழைத்துப் பேசிய இந்தியாவை பாராட்டினார். "ஆப்கானிஸ்தான் இந்தியாவை ஒரு நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை, வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் உறவுகளை ஆப்கானிஸ்தான் விரும்புகிறது. எங்கள் உறவுகளை வலுப்படுத்த உதவும் ஒரு புரிதலுக்கான ஆலோசனை பொறிமுறையை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம்," என்று தெரிவித்தார் முத்தகி.






















