கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை வைத்த பயணிகள் - மாறாக செயல்பட்ட ரயில்வே நிர்வாகம்
மயிலாடுதுறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
![கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை வைத்த பயணிகள் - மாறாக செயல்பட்ட ரயில்வே நிர்வாகம் Mayiladuthurai Railway Passengers Association has announced that they are going to go on a train strike in Mayiladuthurai - TNN கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை வைத்த பயணிகள் - மாறாக செயல்பட்ட ரயில்வே நிர்வாகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/8a6a975031107aaef6ec999ecde48cf41717834810381733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயிலில் அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறைந்த பெட்டிகளுடன் மெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றியதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் வரை நீட்டிக்கப்பட்ட ரயில்
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் கடந்த ஆண்டு சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6.20 க்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. தொடர்ந்து மறுமார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.
12 பெட்டிகளை 16 பெட்டிகளாக மாற்ற கோரிக்கை
முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள் என அதிக அளவில் பயணித்து வருகின்றனர். சேலம் வரை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் பல முறை கோரிக்கை விடுத்து ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
குறைக்கப்பட்ட ரயில் பெட்டிகள்
இந்நிலையில் 12 பெட்டிகளுடன் இயங்கிய ரயிலை தற்போது 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து இன்று முதல் மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயில் மெமுவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பயணிகள் செல்லக்கூடிய சேலம் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே அமரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டு பயணிக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
”2019 தேர்தலை விட 1% அதிகம், இதுவே வெற்றி”.. தோல்வி குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி!
ரயில் மறியல் போராட்டம் அறிவித்த ரயில் பயணிகள் சங்கத்தினர்
ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள் மயிலாடுதுறை டூ சேலம் செல்லக்கூடிய ரயிலை அடையாளம் காண்பதில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மயிலாடுதுறை டூ சேலம் ரயில் ICF வண்டியாக கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து இயக்க வேண்டுமென மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)