Airpods Use : ரொம்ப நேரம் ஏர்பாட்ஸ் யூஸ் பண்றீங்களா? ஆபத்துக்கள் என்னென்ன? - ENT மருத்துவரின் விளக்கம்!
Health Tips: இயர்ஃபோன். ஏர்பாட்ஸ் உபயோகப்பது, அதிக சத்தத்துடன், நீண்ட நேரம் பாட்டு கேட்பது, அதனால் ஏற்படும் அதிர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் பிரியா கனகமுத்து அளிக்கும் விளக்கத்தை காணலாம்.
தொழில்நுட்பம் நம் அன்றாட பணிகளை எளிதாகவும் வசதியாகவும் மாற்றியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும், அதன் பயன்பாட்டின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் நாம் கவனிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது சகஜமாகி விட்டது.
இயர்போன், ப்ளூடுத் இயர்போன், ஏர்பாட்ஸ், ஏர்டோப்ஸ் என விரிகிறது அதன் வகைகள். நடைப்பயிற்சி, போக்குவரத்து நெரிசல், அலுவலக பயணங்கள், நெடுந்தூரம் பயணம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் மேலே குறிபிட்ட ஏதாவது ஒன்று இல்லாமல் பயணம் இருக்காது. வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் இயர்போன் மாறிவிட்டது. அதுவும் அதிக சத்தத்துடன் இயர்போன் உபயோகிப்பதால் காதுகேளாமைக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இயர்போன், ஏர்பாட்ஸ் எதுவாக இருந்தாலும் அதிகமாக பயன்படுத்தும் காதுகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்கிறார்கள். இதனால் என்னென்ன பாதிப்புகள், காது எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் பிரியா கனகமுத்து ABP நாடு தளத்திற்காக பிரத்யேகமாக அளித்த விளக்கத்தினை காணலாம்.
காதுகளின் பாதுகாப்பு முக்கியம்
காதுகள் குறித்து தெரிவிக்கையில்,” காதுகளுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் சிறிய நரம்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். வெளியே ஏதாவது ஒலி கேட்கும்போது அது இந்த நரம்புகள் வழியே மூளைக்கு சென்றடையும். ஒலி எழுதும்போது நரம்புகள் பெரிதாகி மூளைக்கு சமிஞ்னை அளிக்கும். இப்படிதான் நாம் ஒலியைக் கேட்க முடியும். வெற்றிடத்தில் காக்லியர் என்ற உறுப்பு இருக்கும். அதில் உள்ள நரம்புகள் ஒலியைக் கடத்தில் அதிர்வுகளாக பிரதிபலிக்கும். இப்போது மின்னோட்டம் ஏற்படும்;பின்னர், ஒலியாக மாற்றப்பட்டு மூளையைச் சென்றடையும்“ என்று காதுகளின் செயல்பாடு குறித்து விளக்குகிறார்.
ஏர்பாட்ஸ் பயன்படுத்தலாமா?
”ஹெட்போன்/ ஏர்பாட்ஸ் காதிற்குள் காற்று புகுதலை தடுக்கும். ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை நான் பரிந்துரைக்க மாட்டேன். அது செவித்திறன் தொடர்பான பிரச்னைகளுக்கு காரணமாகி விடும். ஏர்பாட்ஸ் பயன்படுத்தும்போது, காதுக்குள் நேரடியாக ஒலி உள்ளே செல்லும். உள்காதில் நேரடியாக ஒலிக்கையில் மூளையில் உள்ள நரம்புகள் கடுமையாக பாதிக்கப்படும். உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். அதீத ஹெட்போன் பயன்பாடு காது கேளாமை, உளவியல் ரீதியான பிரச்னைகள் ஆகியவற்றை உண்டாக்கும்” என மருத்துவர் பிரியா எச்சரிக்கிறார்.
”குறிப்பாக அதிக சத்தம் வைத்து இசை,பாட்டு, வீடியோ கேட்பது உட்புற செவிப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பின் வலிமையிழக்கச் செய்யும்” என்று அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கிறார்.
பாதிப்புகளும் பாதுகாப்பும்
”அதிகமாக ஏர்பாட்ஸ் பயன்படுத்துவது காது கேளாமைக்கு வழிவகுக்கும். செவித்திறன் சீராக செயல்பட உள்காதில் சில மெலிதான ஹேர் செல்கள் இருக்கும். உட்புற, வெளிப்புற செல்கள் என்று சொல்லுவோம். ஹேர் செல் என்பது முடி மாதிரியே சிறிய அளவிலான முடிகள் இருக்கும். அதிகமாக சத்தத்துடன் அல்லது அதிக நேரம் ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதால் ஹேர்செல்கள் பாதிக்கப்படும்.
ஹேர்செல்கள் பாதிக்கப்படுவதால் ‘Tinnitus’ என்ற பிரச்சனை ஏற்படலாம். இது காதில் ‘க்கோயிங்ங்ங்ங்ங்ங்..’ என்று இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சனை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதை கவனிக்காமல்விட்டால், நரம்பு பாதிப்படைந்து அதில் கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த கட்டிகள் coustic neuroma அல்லது vestibular schwannoma என்று அழைக்கப்படும். உள்காதில் இருக்கும் கட்டிகள் இவை வளர்வதால் மூளையையும் பாதிக்கும்” என்று விளக்குகிறார்.
ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை என்றால், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உபயோகிக்கும் வகையில் பழக்கப்படுத்தி கொள்ளலாம் என்று பிரியா பரிந்துரைக்கிறார். ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை தவிர்ப்பதே காதுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு வழி. அதிகமாக ஏர்பாட்ஸ் பயன்படுத்துவது, அதிக சத்தத்துடன் இசை கேட்பதை தவிர்க்க வேண்டும்.
செவித்திறனில் பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏர்பாட்ஸ் பயன்பாட்டை குறைப்பது நல்லது என்று மருத்துவர் பிரியா அறிவுறுத்துகிறார். மருத்துவரின் அறிவுரையை கவனத்துடன் பின்பற்றுவது உங்கள் காதுகளைப் பாதுகாக்கும்.