இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது - அன்புமணி ராமதாஸ்
மீண்டும் திமுக வெற்றி பெற்றால் மக்கள் வாழ முடியாது மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்கு தான் குடிபெயர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில்;
கடலில் கலக்கும் 50 டிஎஸ்பி தண்ணீர்
ஒரு ஆண்டுக்கு குறைந்தது 50 டிஎம்சி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. ஆனால், இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் மக்களும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், தமிழக அரசு செவி சாய்க்க மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து நான் தலைமைச் செயலகம் சென்று நேரில் வலியுறுத்தினேன். உடனே அதிகாரிகளை அழைத்து அன்புமணியின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என உத்தரவிட்டார். ஐஐடி அதிகாரிகளும் வந்தார்கள், அளவெடுத்தார்கள், ரூ.750 கோடி ஆகும் என்று சொன்னார்கள். ஆனால், தற்போது வரை அந்த தடுப்பணை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் அப்படியே உள்ளது.

அணைக்கட்டினால் இவ்வளவு நன்மைகள் நடக்கும்
நான் கோரிக்கை வைத்தது போல இந்த பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்யலாம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையும் இருக்காது. கொள்ளிடம் ஆற்றின் கறைகள் பலவீனம் ஆகியுள்ளன அவற்றை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இது குறித்து எல்லாம் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆற்றின் கறைகள் வெள்ளப்பெருக்கு காலத்தில் உடைந்தால் பல கிராமங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படும். அது குறித்து எல்லாம் தமிழக அரசு கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் ஆனால் பொதுமக்கள் என் பாதுகாப்பிற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

போராட்ட எச்சரிக்கை
இதற்கு மேலும் அந்த கறைகளை பலப்படுத்த, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் தான் அங்கு தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு தயங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை 26 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தான் அதிகமான மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு நான்கு கிலோமீட்டர் ஒரு மணல் குவாரி உள்ளது. மணல் குவாரிகளை கட்டி தண்ணீர் தேங்கி நின்றால் அதன் பிறகு மணலை கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் திமுக அரசு செய்ய மறுக்கிறது. மக்களைப் பற்றியோ விவசாயம் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ திமுக அரசுக்கு எந்த கவலையும் இல்லை மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

மக்கள் வாழ முடியாது
மீண்டும் திமுக வெற்றி பெற்றால் மக்கள் வாழ முடியாது மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்கு தான் குடிபெயர வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு பணம் கொடுத்து உங்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுகவினர் பணமூட்டைகளோடு வருவார்கள், வாக்குக்கு ஆயிரம் இரண்டாயிரம் என அள்ளிக் கொடுப்பார்கள் ஏமார்ந்து விடாதீர்கள். இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது, நான் மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன். முதலமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்கிறேன், முதலமைச்சர் கடிதம் எல்லாம் எழுதி இருக்கிறேன், இந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






















