சாலையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் - ஏன் தெரியுமா?
சீர்காழி அருகே நான்கு வழி சாலை பணிக்காக மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் பாலம் உடைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் சாலையில் பந்தல் அமைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்கு சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாலம் உடைந்ததாக கூறி லாரிகள் மற்றும் பேருந்தை சிறைபிடித்து நிரந்தர பாலம் அமைத்துத் தரக் கோரியும், சவுடு மண் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் சாலையில் பந்தல் அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவ கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1000 -க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் தொடர் கோரிக்கை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமுல்லைவாசல் காளியம்மன் கோயில் எதிரில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது.
Kochi Trip: கொச்சி ட்ரிப் போறீங்களா? இதையெல்லா மறக்காம சுத்தி பாருங்க - டாப் 8 ஸ்பாட்கள்
சேதமடைந்த பாலம்
இந்நிலையில் சீர்காழி - தொடுவாய் பிரதான சாலையில் மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் சிறு பாலம் இருந்தது. இந்த பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையினால் சேதமடைந்து பெரிய குழாய் அமைத்து தற்காலிகமாக பால அமைத்து மீனவர்களும் பொது மக்களும் பயன்படுத்தி வந்தனர்.
500 -க்கும் மேற்பட்ட லாரிகள்
இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக முன்பாக அப்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கு சவுடு மண் குவாரியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சிறு குழாய்ப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது. சேதம் அதிகமாகி குழாய் பாலம் முற்றிலுமாக உடைந்து தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் பந்தல் அமைத்து போராட்டம்
இதனை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தினர் மற்றும் ஊராட்சியை சேர்ந்த 200 -க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அவ்வழியே நான்கு வழிச்சாலைக்கு சவுடு மண் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் நடுவில் டென்ட் கொட்டகை அமைத்து அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
உடனடியாக இப்பகுதியில் நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும் எனவும், சவுடு மண் குவாரிகளை நிரந்தரமாக மூடக் கோரியும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி, சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு, இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரளாக திரட்டி பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். சாலையில் டென்ட் அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

