தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயக் கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருபவர் அ.சிதம்பரம் (50). கூலித் தொழிலாளி. இவர் தன் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிதம்பரம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது, இதை எடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் கைது செய்து தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தார்.
மினி பஸ் மோதி முதியவர் பலி
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்சிலிருந்து இறங்கிய முதியவர் மீது மினி பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). இவரது அம்மா மரகதம் (90). முருகேசன் யாசகம் எடுத்து தனது அம்மாவை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் ஏறி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். பஸ் பழைய பஸ்ஸ்டாண்டில் வந்து நின்றது. அதில் இருந்து முருகேசன் கீழே இறங்கினார்.
அப்போது பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்த மின் பஸ் ஒன்று முதியவர் மீது மோதியது. தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின் சக்கரம் ஏறியது இதில் தலைநசுங்கி முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த மினிபஸ் டிரைவரும், கண்டக்டரும் மினி பஸ்சை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விபத்து குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையில் இயக்கப்படும் மினி பஸ்கள் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி மிக வேகமாக இயக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் வந்த வாகனம் மீது மினி பஸ் வேகமாக வந்து மோதிய சம்பவமும் நடந்தது. இதேபோல் மருத்துவமனை உள்ள பகுதியிலும் அதிகளவு ஒலி எழுப்பி மினி பஸ்சை இயக்குகின்றனர். பழைய பஸ்ஸ்டாண்ட்டிற்குள் உள்ளே வரும்போது மிக வேகமாக இயக்குவதால் பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகள் அதிர்ச்சியடைந்து ஓடும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே மினி பஸ் இயக்கத்திற்கு கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே வெளிவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன்,60, மீனவர். இவர் மல்லிப்பட்டினத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, மீண்டும் ஊருக்கு பைக்கில் திரும்பினார்.
ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (24), கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் மல்லிப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில், இரண்டு பைக்குகளும் நேருக்கு மோதிக்கொண்டதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் செல்லையன், ரஞ்சித் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





















