MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
திருவண்ணாமலை திமுக இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், அமித் ஷாவிற்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

திருவண்ணாமலை இணைஞர் அணி மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், பாஜகவிற்கும், அமித் ஷாவிற்கும் சவால் விடுக்கும் வகையில், உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார். அவர் கூறியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“உங்கள் சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“
இந்தியாவிலேயே பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீதியாக போராடிவரும் ஒரே மாநில கட்சி திமுக தான் எனவும், அவர்களால் வெற்றிகொள்ள முடியாதது தமிழ்நாட்டை மட்டும் தான் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். அதனால் தான் அமித் ஷா போன்றோருக்கு திமுக மீது எரிச்சல் உண்டாவதாகவும் அவர் கூறினார். பீகாரில் வெற்றி பெற்றுவிட்டேம், அடுத்தது தமிழ்நாடு தான் என அமித் ஷா பேசியதை அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமித் ஷாவிற்கு சவால் விடுத்த மு.க. ஸ்டாலின், “நீக்கள் மட்டுமல்ல, உங்கள் சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, இது தமிழ்நாடு என கூறிய அவர், “எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே“ என்று பஞ்ச்சாக பேசினார். மேலும், “அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்“ என பாஜகவிற்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
“திமுக போன்று உலகத்திலேயே யாரும் திட்டங்களை கொண்டு வந்ததில்லை“
மக்களுக்காக இருப்பதுதான் அரசியல் என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், அந்த அரசியலை செய்யத்தான் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த இளைஞர்களிடம் தெரிவித்தார். மேலும், மக்களிடம் செல்லுங்கள், அவர்களோடு வாழுங்கள், அவர்களுக்காக குரல் கொடுங்கள், அதுதான் உங்களுக்கான டாஸ்க் என்றும் அறிவுரை வழங்கினார்.
அதோடு, அரசியலில் சொகுசை எதிர்பார்க்கக் கூடாது என்றும், கடுமையாக உழைப்பவர்களுக்கே, கட்சியிலும், மக்கள் மனதிலும் இடம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார். பேரறிஞர் அண்ணா கருணாநிதியின் உழைப்பை பாராட்டியதாகவும், கருணாநிதி தன்னுடைய உழைப்பை பாராட்டியதாகவும், தற்போது தானும் உதியநிதியின் உழைப்பை பாராட்டுவதாகவும், அதைத் தான் இளைஞர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
உலகத்திலேயே திமுக போன்ற முத்திரை பதிக்கும் திட்டங்களை யாரும் கொண்டு வந்ததில்லை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். ஒரு புத்தகமே போடும் அளவிற்கு தினமும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
“2026-ல் திராவிட மாடல் ஆட்சி 2.O“
10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டை பாதாளத்தில் தள்ளிய அதிமுகவினர், உத்தமர்கள் போல் வேஷமிட்டு வந்து வாக்கு கேட்பார்கள் என்றும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் பாஜகவினர் பொய் பரப்புரைகளை செய்வார்கள், பதற்றத்தை உண்டாக்கும் அரசியலை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று வருவார்கள் எனவும், அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அடிமை சேவகம் செய்ய அடிமைக் கூட்டங்கள் இருப்பதாகவும் சாடினார்.
2026 தேர்தலில் மக்கள் முன் இருக்கும் ஒரு கேள்வி, தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் முன்னோக்கி நடைபோடப் போகிறோமா.? அல்லது ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சிப்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா என்பதுதான் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். அந்த கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடைதான், திராவிட மாடல் ஆட்சி 2.O என அவர் உறுதிபடக் கூறினார்.





















