TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026 Kongu Mandal: எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் கொங்கு மண்டலம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 Kongu Mandal: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் வகிக்கும் முக்கியத்துவம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்பமனு விநியோகம், வேட்பாளர்களை தேர்வு செய்வது, களப்பணிகளுக்கான குழுக்களை அமைப்பது தொடர்பான பணிகள் முழு வேகமெடுத்துள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது யார் என்பதை தீர்மானிப்பதில் சமூக வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே தனித்தொகுதிகளின் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், இன்று அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலம் குறித்து விரிவாக அறியலாம்.
கொங்கு மண்டலம்:
கொங்கு மண்டலம் என்பது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் போன்ற 10 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டங்கள் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாகவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி இன்றைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரை சூளுரைத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் வலுவான எதிர்க்கட்சியாக அமர இந்த கொங்கு மண்டலம் தான் மிக முக்கிய பங்கு வகித்தது.
அதிமுகவின் கோட்டை..
2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி,
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கூட்டணி கட்சியான பாஜக உடன் சேர்ந்து அதிமுக கைப்பற்றியது
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 4 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 2 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது
- சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் கூட்டணி கட்சியான பாமகவுடன் சேர்ந்து அதிமுக 10 தொகுதிகளை அதிமுக வென்றது
- கரூர் மாவட்டத்தில் மட்டும் 4 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது
- கிருஷ்ணகிரி மாவடத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளையும் கூட்டணி கட்சியான பாமக உடன் சேர்ந்து அதிமுக கைப்பற்றியது
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது
இதன்படி,கடந்த தேர்தலின் முடிவுகளில் அதிமுக வென்ற 65 இடங்கள் உட்பட அதன் கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 43 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் இருந்தே கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்?
கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருப்பதற்கு மேற்கூறிய சான்றுகளே ஆதாரமாக உள்ளன. இதன் காரணமாகவே அந்த பகுதியில் கட்சியை வலுப்படுத்த தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பிற கட்சிகளில் இருந்து ஏராளமான உறுப்பினர்களை இணைத்து வருகிறது. அதேநேரம், ஈரோட்டில் அதிமுகவின் முகமாக கருதப்பட்ட செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இதுபோக அதிமுகவின் பல நிர்வாகிகளும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதிமுக கூட்டணியின் பிரதான கட்சியான பாமகவும் இரண்டாக பிளவுபட்டு இருப்பது திமுகவிற்கு சாதகமாக கருதப்படுகிறது. இதனால், கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதல் தொகுதிகளில் வென்றுவிட வேண்டும் என ஆளுங்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு செந்தில் பாலாஜியை மிகத்தீவிரமாக களப்பணியில் இறக்கி இருப்பதை பார்க்கலாம்.





















