Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach Mass Shooting: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Bondi Beach Mass Shooting: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு:
ஆஸ்திரேலியானின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில், அப்பகுதியை சேர்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதனை கண்டதும் மக்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும், இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்ட நவீத் மற்றும் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஒரு பயங்கரவாத செயலாகக் கருதப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை:
ஞாயிற்றுக்கிழமை, கேம்பல் பரேட் அருகே உள்ள ஒரு பாதசாரி பாலத்தில் இருந்து இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்த தாக்குதல் நடந்தது. சம்பவ இடத்தில் வைத்தே மடக்கிப் பிடிக்கப்பட்ட 24 வயதான நவீத் அக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். ஆனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அவரது தந்தை, ஒரு பழக் கடை வைத்திருந்த 50 வயதான சஜித் அக்ரம், துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டதாக சண்டே மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, அவர்கள் ஜெர்விஸ் விரிகுடாவிற்கு வார இறுதி மீன்பிடி பயணமாகச் செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். தாக்குதலின்போது துணிச்சலான ஒரு நபர், தாமாக முன்சென்று தாக்குதல் நவீத்தை பிடித்து தாக்கி அவரிடமிருந்து ஆயுதத்தை பறித்து நிராயுதபாணியாக்கினர். இதனால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்
இதையடுத்து இவர்களுக்கு எப்படி அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கிடைத்தது? அவர்களுக்கு கூட்டாளிகள் யாராவது இருந்தார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களையும் (IED) போலீசார் கண்டுபிடித்தனர். நவீத்தின் வீடு உட்பட சிட்னி முழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெடித்த சர்வதேச அரசியல்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தாக்குதலை "தீய யூத-விரோத செயல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அத்தகைய வன்முறையை ஒழிப்பதாக உறுதியளித்ததோடு, தேசிய ஒற்றுமை மற்றும் ஆஸ்திரேலியாவின் யூத சமூகத்திற்கான ஆதரவை வலியுறுத்தினார். அதேநேரம், பாலஸ்தீன அரசை ஆதரிப்பது யூத எதிர்ப்பு நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று அல்பானீஸை எச்சரித்ததாக இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். காசா போர் தொடர்பாக உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.





















