Tahawwur Rana: அமெரிக்காவில் இருந்து தட்டி தூக்கிய இந்தியா.. யார் இந்த தஹாவூர் ராணா? லிஸ்டில் மேலும் 4 பேர்..!
Tahawwur Rana: மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணாவை, இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tahawwur Rana: தஹாவூர் ராணாவை போன்று மேலும் 4 பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தி அழைத்து வர மத்திய அரசு முயன்று வருகிறது.
தஹாவூர் ராணாவை நாடு கடத்த அனுமதி:
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ஹுசைன் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் தனது கடைசி சட்ட வாய்ப்பை இழந்துள்ளார். பயங்கரவாத குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறுஆய்வு கோரிக்கையை நிராகரித்ததால், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டைச் சேர்ந்த ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும், நீதியின் முன் நிறுத்தவும் வழிவகை உருவாகியுள்ளது. 64 வயதான ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ராணாவைத் தவிர, சட்டங்களில் இருந்து தப்பிக்க தப்பியோடிய பல குற்றவாளிகளை இந்தியா திரும்ப அழைத்து வர மத்திய அரசு முயற்சிக்கிறது. தப்பியோடியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கடந்த மாதம் அரசாங்கம் கூறியது, இது குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு "பாதுகாப்பான புகலிடமாக" மாறியுள்ளது.
யார் இந்த தஹாவூர் ஹுசைன் ராணா?
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தொழிலதிபரான ராணா, 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலில் முக்கிய பங்களிப்பு செய்ததாக தேடப்பட்டு வருகிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ மருத்துவரான, அவருக்கு 2008 தாக்குதல்கள் பற்றி முன்பே தெரிந்திருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு டென்மார்க்கில் தீவிரவாத சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தவிர, லஷ்கர்-இ-தொய்பா (LeT) க்கு பொருள் ஆதரவுடன் உதவியதற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
26/11 மும்பை தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் ராணாவுக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர், இதில் 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு, மும்பையின் சின்னமான மற்றும் முக்கிய இடங்களில் மக்களைத் தாக்கி கொன்றனர்.
நாடு கடத்த முயலும் 4 பேர்:
தஹாவூர் ராணவை போன்று மேலும் சிலரை வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது. அவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் புலிப்படையின் உண்மையான தலைவரான காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கில் அலியா அர்ஷ் டல்லா கனடாவில் உள்ளார்
- அன்மோல் பிஷ்னோய் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரர் ஆவார். தற்போது கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் உள்ளார்
- 9,000 கோடிக்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கை எதிர்கொண்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார்
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.





















