சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் புதைக்கப்பட்ட உடல்கள் - சீர்காழி அருகே பரபரப்பு
சீர்காழி அருகே சுடுகாடு பகுதியில் சாலை அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு. சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழஅகரம் கிராமத்தில் சுடுகாடு பகுதியில் சாலை அமைப்பது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர்களது சுடுகாட்டு பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தில் சாலை அமைத்து விட்டதாக கூறி அவர்கள் சாலையின் நடுவே இறந்தவர்களின் உடலை புதைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் குறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் இன்று சீர்காழியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆச்சாள்புரம் கீழஅகரம் பகுதியை சேர்ந்த கிராமவாசிகள், தாங்கள் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டின் மீது சாலை அமைக்க கூடாது என்றும், சுடுகாட்டு பகுதிக்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் கூறுகையில், அப்பகுதியில் ஏற்கனவே சாலை அமைந்து இருந்ததால் தற்போது முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசின் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், சாலை பணிகள் தொடங்கும் போது பொதுமக்களிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் வரவில்லை. ஆகையால் பணிகள் தொடரப்பட்டது.
அவ்வாறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சூழலில், இறந்தவரின் உடலை ஏற்கனவே சாலை அமைக்கப்பட்டதன், ஓரம் அதாவது அப்பகுதி மக்களின் சுடுகாட்டு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிவித்து, தற்போது இந்த சாலையை அமைக்க ஆட்சேபனை இருப்பதை முன்னரே தெரிவித்திருந்தால், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த பணிகளை தொடர்ந்து செய்வது தொடர்பாக பரிசீலித்திருக்கலாம், இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு செயல்படுவதால், அப்பகுதி பொதுமக்களால் ஆட்சேபனை உள்ளதை கருத்தில் கொண்டு, சாலை அமைக்கும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துப்பதாக தெரிவித்துள்ளார்.
Whatsapp Account Ban: ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சி காரணம் என்ன?
மேலும் கூட்டத்தில் சுடுகாடு பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் கரையினை அளவீடு செய்து சுற்றுசுவர் அமைத்து அதில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஆதிராவிடர் தனி வட்டாட்சிவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர், சீர்காழி வட்டாட்சியர், ஆணைக்காரன்சத்திரம் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர்கள், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய உதவி பொறியாளார், கொள்ளிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவர், ஆச்சார்புரம் கீழ அகரம் பகுதிவாசிகள் கலந்து கொண்டனர்.