TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: கரூர் துயரத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்நபராக தொடர்புகொண்டு பேசியதாக ஆதர் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

TVK Vijay: தமிழ்நாட்டின் எதிர்காலம் விஜய் தான் என்பது டெல்லி வரை தெரிந்துள்ளது என, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி
கன்னியாகுமரி அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவம் தொடர்பாக, அதன் அடிப்படையில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளையும் குறிப்பிட்டு பேசினார். அதன்படி, ”கரூரில் கொலைப்பழியை போட்டு பார்த்தார்கள். தூய உள்ளத்தை கொண்ட எங்கள் தலைவர் விஜய் மீது கொலைப்பழியை சுமத்த பார்த்தார்கள். ஆனால் முதல் போன் எங்கிருந்து வந்தது தெரியுமா? ராகுல் காந்தியிடம் இருந்து. அதில் தான் ஸ்டாலின் பயந்துவிட்டார். ஏனென்றால் ராகுல் காந்திக்கு தெரியும். அங்க என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று, அதனால் தான் ”சகோதரா நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன், கவலைப்படாதீர்கள்” என பேசினார். அந்த நேரத்தில் டெல்லி முதற்கொண்டு அனைத்து தலைவர்களும் பேசினார்கள்.
செங்கோட்டையன் தவெக வந்தது ஏன்?
செங்கோட்டையன் நினைத்திருந்தால் பாஜகவில் இணைந்து ஆளுநர் ஆகியிருக்கலாம், மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம். திமுகவில் இணைந்து நாளையே அமைச்சரும் ஆகியிருக்கலாம். ஆனால் ஏன் அவர் தவெகவிற்கு வந்தார்? செங்கோட்டையனுக்கு தமிழ்நாட்டின் எதிர்காலம் விஜய் என்று தெரிந்ததால் தான் இங்கு வந்தார். இதனை பாஜக முதல் கொண்டு உணர்ந்துவிட்டது. அந்த வலிமை விஜய்யிடம் உள்ளது. எம்.ஜி.ஆர்-ஐ பார்த்து நீங்கள் சொன்னீர்கள். அவருக்கு பண பலம் இருக்கா? வாக்கு வலிமை இருக்கா? மூத்த தலைவர்கள் உடனிருக்கிறார்களா? என்று. இதோ அண்ணன் செங்கோட்டையன் வந்திருக்கிறார். 55 வருஷ அனுபவம் கொண்டவர். அவருக்கு தெரியாதா? அதிமுக கூடாரம் இருக்குமான்னே தெரியாது எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்த்த செங்கோட்டையன் விஜய்யை பார்த்து வந்தார் என்றால் விஜய்தான் அடுத்த எதிர்காலம்.
The first person to contact Thalapathy Vijay after the Karur stampede was #RahulGandhi. He told him, Brother, I’m with you. Don’t worry. - @AadhavArjuna pic.twitter.com/aSNXOx9pg3
— Actor Vijay Team (@ActorVijayTeam) December 23, 2025
”அதிமுக கூடாரம் காலி”
இன்னும் பல பேர் வர ரெடியாகிட்டு இருக்காங்க.. இன்னும் சில நாட்களில் அதிமுக கூடாரம் இருக்குமா என்ரே தெரியாது. மக்களும் தலைவரும் இணையும் இடத்தில்தான் ஒரு புதிய ஆட்சி உருவாக முடியும். நான் வரும் போது இந்த ஊரே திரண்டு நிற்கிறது. இதற்கு ஒரு ரூபாய் நான் கொடுக்கல. இதுதான் அன்பு.. இந்த அன்பை கோடி ரூபாய் இருந்தாலும் எடுத்துக்கொள்ள முடியாது.
திமுக மீது விமர்சனம்
உங்க பையனை முதல்வர் ஆக்குவதற்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம். அதற்காக என்ன வேணா செய்யலாம். ஆனால் அன்பு உருவாக்கப்படுவது இல்லை. 40-க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. அதில் திமுகவின் 22 எம்பிக்களில் ஏன் ஒரு கிறிஸ்தவ பிரதிநிதி, இஸ்லாமிய பிரதிநிதி கூட இல்லை. இதுதான் நாடகம். திமுக மதசார்பற்ற கட்சி என்று சொல்வார்கள். ஆனால் ஒரு எம்பி பதவியில் கூட சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை” என ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பங்கேற்பதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் முற்றிலுமாக இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.





















