JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Vijay JanaNayagan Vs SK Parasakthi: ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியாவது, சிவகார்த்திகேயனையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

JanaNayagan Vs Parasakthi: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக, வரும் ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாக உள்ளது.
விஜயின் கடைசி படம் ஜனநாயகன்?
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி மூலம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படம் தான், தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் அரசியல் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. வசூல் அடிப்படையில் தமிழ் சினிமாவின் முதன்மையான நாயகனான விஜயின் கடைசி படத்தை திரையில் காண, தமிழ்நாடு மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி
இதனிடையே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம், வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், கடைசிநேர ட்விஸ்டாக ஜனநாயகன் திரைப்படம் வெளியான அடுத்த நாளே, அதாவது ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தலைமை செயல் அதிகாரியாக உள்ள, ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் இந்த படத்தை மாநிலம் முழுவதும் விநியோகிக்க உள்ளது.
அரசியலால் ஜனநாயன் Vs பராசக்தி:
விஜயின் கடைசி படத்தை தோல்வி படமாக்க வேண்டும், வசூலை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், ஆளும்கட்சியின் அழுத்தத்தால் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும்கட்சி குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் பராசக்தி திரைப்படம் விநியோகிக்கப்படுவதால், ஜனநாயகனுக்கு போதிய திரையரங்குகள் ஒதுக்கப்படாமல் போகலாம். அதிகளவில் அந்த படத்தை திரையிடக்கூடாது எனவும் திரையரங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் விமர்சனத்தையும்,வேதனையையும் வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை ஒரே நேரத்தில் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமே வெளியிட்டபோது, துணிவை காட்டிலும் வாரிசுக்கு குறைவாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசியல் உள்நோக்கங்களுக்காக திரையுலக வணிகம் வேட்டையாடப்படுவதாகவும் திரைத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிருப்தியில் சிவகார்த்திகேயன்?
அமரன் படம் தந்த பெரும் வெற்றியை தொடர்ந்து, விஜயின் தி கோட் படத்தில் செய்த கேமியோ மூலம் சிவகார்த்திகேயனின் ஸ்கேல் பெரிய அளவில் உயர்ந்தது. ”துப்பாக்கியை பிடிங்க சிவா” என்ற வசனம் மூலம், விஜய் தன்னுடைய இடத்தையே சிவகார்த்திகேயனுக்கு விட்டுக் கொடுத்ததாக பேசப்பட்டது. இதனை தனக்கான இமேஜ் பூஸ்டராக அவர் பயன்படுத்திக் கொண்டதோடு, விஜய் ரசிகர்களையும் தனக்கான ஆதரவாளர்களாக மாற்றிக்கொள்ள சிவகார்த்திகேயன் அதிகளவில் மெனக்கெட்டார். ஆனால், கடைசியில் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படும் ஜனநாயகனுக்கு எதிராக, தன்னுடைய படம் பயன்படுத்தப்படுவது சிவகார்த்திகேயனுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் வெறுப்பும் தன் மீது குவியும் என கருதுகிறாராம். ”உங்க போதைக்கு நான் ஊறுகாயா” என்ற நிலையில் தான் சிவகார்த்திகேயன் உள்ளாராம்.
எஸ்கேப் ஆன சூர்யா..
முன்னதாக சூரரைப் போற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கராவின், பராசக்தி படத்திலும் சூர்யா தான் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் அவர் படத்தில் இருந்து விலக, சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏற்பட்டுள்ள சூழலை கண்டு, நல்ல வேளை இந்த அரசியல் சதுரங்கத்தில் இருந்து சூர்யா தப்பித்து விட்டார், ஆனால் சிவகார்த்திகேயன் மாட்டிக்கொண்டுவிட்டார் என கோடம்பாக்கம் வட்டாரம் பேசி வருகிறது.



















