ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
ஆட்சியில் அங்கம் வகிப்போம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொன்ன நிலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி காங்கிரஸ் மற்றும் தவெகவினர் ஒரே மேடையேறுவது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
தவெகவின் முதல் மாநாட்டிலேயே எங்களுடன் வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என சொல்லி பற்ற வைத்தார் அக்கட்சித் தலைவர் விஜய். அன்றைய நாளில் இருந்தே திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என குரல் எழுப்ப ஆரம்பித்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது.
இந்தநிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தலை கருத்தில் கொண்டு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து உறுப்பினர் குழுவை அமைத்தது. இந்த அறிவிப்பு காங்கிரஸ் கூட்டணி மாறும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்க்கப்பட்டது.
இந்த நேரத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியொன்றில், ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் என கூறியுள்ளார். அரசியல் ஆலோசகராக அறியப்படும் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பரபரப்புக்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் தவெகவினர் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக மேடையேறுகின்றனர்.
28வது அருமனை சமூக நல்லிணக்க மாநாடு என்ற பெயரில் ஆண்டுதோறும் நடக்கும் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் மற்றும் தவெகவினர் கலந்து கொள்கின்றனர். தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் மற்றும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பிக்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் MLA-க்கள் தாரகை காட்பட், ராஜேஷ்குமார் பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பான அறிவிப்பை ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ளார். ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்த சிடிஆர் நிர்மல்குமாரிடம் ஆதவ் அர்ஜுனா டிசம்பர் 27ஆம் தேதி ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார் என்று தகவல்கள் வருவதாக கேள்வி கேட்டதற்கு இதுபோன்று ஏதாவது இருந்தால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பதில் கொடுத்தார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேச்சு அடிபட்ட நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசியிருப்பது, 2 கட்சியினரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அடுத்தடுத்த சம்பவங்கள் மூலம் தவெக காங்கிரஸை சுற்றி கூட்டணி தொடர்பான கேள்விகள் வலம் வர ஆரம்பித்துள்ளன.





















