மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!
வித்தியாசமான முறையில் மருத்துவர்களுக்கு அஞ்சலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
மயிலாடுதுறையில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலக ஊழியர்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் அஞ்சல் அட்டையில் வாழ்த்துகளை எழுதி பெற்று அதனை மருத்துவர்களிடம் வழங்கி வித்தியாசமான முறையில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்கு நாடு தேதி மாறுபாடு
மருத்துவர்களின் உன்னத சேவையைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது மார்ச் 28, 1933. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள விண்டரில் இந்த முதல் அனுசரிப்பில் மருத்துவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டது. டாக்டர் லாங் உட்பட இறந்த மருத்துவர்களின் கல்லறைகளில் மலர்கள் வைக்கப்பட்டது. தேசிய மருத்துவர்கள் தினம் என்பது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகங்களுக்கு மருத்துவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாகும். அந்த நாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வைப் பொறுத்து நாட்டிற்கு நாடு தேதி மாறுபடுகிறது.
ஜுலை 1 -ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம்
அந்த வகையில் இந்திய நாட்டின் தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை 1 -ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் பிதான் சந்திரராய்
டாக்டர் பிதான் சந்திரராய் மருத்துவம், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்து இந்திய மருத்துவ உலகில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிகவும் பெருமைக்குரிய மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கினார். மருத்துவ வசதிகள் குறைந்த பகுதிகளில் மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மருத்துவக்கல்வி மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதய நல சிகிச்சையில் புதிய வழிமுறைகளை உருவாக்கினார்.
1962 -ல், ஜூலை 1 அன்று, தனது பிறந்த நாளிலேயே அவர் மறைந்தார். அவரது வீடு, அவரது மறைவிற்குப் பின் அவர் தாயார் காமினி தேவியின் பெயரில் ஒரு முதியோர் இல்லமாக மாறியது. 1961 பாரத் ரத்னா விருது வழங்கி அவரை நாடு கௌரவித்தது. அவரது நினைவைப் போற்றும் வண்ணம் 1976 -ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பி.சி ராய் தேசிய விருது வழங்கப்படுகிறது. அரசியல், அறிவியல், தத்துவம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மருத்துவர்களின் சிறப்பு
நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மீட்டெடுப்பதில் மருத்துவர்களின் அறிவும் நடைமுறை செயல்திறனும் மிகவும் முக்கியமானது. அவர்களின் நிபுணத்துவம், பச்சாதாபம், இரக்கம் ஆகியவை நோயாளிகளின் வாழ்க்கையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ளை அங்கி அணிந்து தன்னலம் இன்றி மற்றவர்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் மாவீரர்களை கௌரவிக்கும் நாளாக ஜூலை 1 இருக்கிறது.
மருத்துவர்கள் வெள்ளை நிற உடைக்கான காரணம்
ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவப் பயிற்சியாளர்கள் கருப்பு நிற உடைகளையே அணிந்திருந்தார்கள். அவை சம்பிரதாயம் மற்றும் அமைதியுடன் தொடர்புடையதாக இருந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆன்டி செப்டிக் அறுவை சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டர் ஜோசப் லிஸ்டர் மருத்துவர்கள் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனென்றால், வெள்ளை அங்கி தூய்மை, சுகாதாரம் மற்றும் நேர்மறையான பிம்பத்தை வெளிப்படுத்த ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது என அவர் கருதினார். எனவே, 1880 மற்றும் 90களில் இருந்து இது பரவலாக மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு, வெள்ளை நிற அங்கிகளை அணிய ஆரம்பித்தனர். தற்போது பல நாடுகளில் மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகளை அணிவது வழக்கமாகி விட்டது. தற்போது இந்திய மருத்துவ சங்கம், ஐக்கிய அமெரிக்க மருத்துவ சங்கம், பிரிட்டிஷ் மருத்துவ சபை போன்றவற்றின் விதிமுறைகளின்படி மருத்துவர்கள் வெள்ளை அங்கிகள் அணிய வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
மயிலாடுதுறை தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிப்பு
முன்னதாக மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளர் ஆசீப் இக்பால் தலைமையில் அஞ்சலக ஊழியர்கள் அந்தந்த வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் அஞ்சல் அட்டையை வழங்கி, மருத்துவர்கள் பற்றிய கருத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும் ஒவ்வொரு அஞ்சல் அட்டையிலும் மாணவர்கள் ஆர்வமுடன் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது கருத்துக்களை எழுதி அஞ்சலக ஊழியர்களிடம் வழங்கினர்.
இதனை சேகரித்த ஊழியர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் அந்தந்த தபால் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவர்களுக்கு மாணவர்கள் கைப்பட எழுதிய அஞ்சலக வாழ்த்து அட்டையினை வழங்கி மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே வித்தியாசமான முறையில் மருத்துவர்களுக்கு அஞ்சலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.