மயிலாடுதுறையில் அரசு பேருந்தில் திடீர் பயங்கர சத்தம் - பதறிப்போன பேருந்து பயணிகள்!
மயிலாடுதுறையில் அரசு பேருந்ததின் கீழ் பட்டை ஆங்கில் உடைந்து பாதியில் நின்ற பேருந்தால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர் வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் பல குற்றச்சாட்டுக்களை மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அரசு பேருந்து கழகத்தின் மீது குற்றச்சாட்டை பதிவுசெய்து வருகின்றனர்.
ABP Ideas Of India : ஏபிபி ஐடியாஸ் ஆப் இந்தியா 3.0: மக்களை மையப்படுத்திய மாநாடு..
இந்நிலையில், தடம் எண் 1 ஏ எண் கொண்ட அரசு பேருந்து மயிலாடுதுறை பேருந்துநிலையத்தில் இருந்து சுமார் 70 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நீடுர், கொண்டல், வில்லியநல்லூர், சாத்தனூர், பட்டவர்த்தி வழியாக சித்தமல்லி கிராமத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் காவேரி புது பாலம் அருகே பேருந்தில் திடீரென உடையும் சத்தம் கேட்டு பேருந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பயணிகள் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், பேருந்தின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்ததால் பேருந்து பாதி வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் மாற்று பேருந்து கிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல வழி இன்றி சாலையில் ஓரமாக தரையில் அமர்ந்து பொதுமக்களும், மாணவ மாணவிகளும் இன்னலுக்கு ஆளாகினர். எங்கள் பகுதிக்கு "அத்தி பூத்தார் போல்" எப்போதாவது தான் பேருந்து வரும் எனவும், அதுவும் தற்போது பழுதாகி நின்று விட்டது என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், ஏழை எளியோர் பயன்படுத்தும் அரசு பேருந்துகளை சரி செய்து பழைய பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிபாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே காவேரி புது பாலம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று வேறு ஒரு பேருந்தின் ஆங்கில் பட்டை உடைந்து இதே சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
12th Chemistry Model Question Paper: வேதியியலில் வெற்றி நிச்சயம்- இதோ பிளஸ் 2 மாதிரி வினாத்தாள்!