Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு
Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய் 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசியக் கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளுமே முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து தேர்தல் கூட்டணி, இடப் பகிர்வு ஆகியவற்றுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதவது:
’’கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட பானை சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது.
ஆளுங்கட்சியின் தலையீடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அண்மைக் காலமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பதற்கான தோற்றத்தை உருவாக்குகிறது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு.
அரசியல் தலையீடு, ஆளும் கட்சி தலையீடு இல்லாமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று சரத் பவார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களுமே எதிர்பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இன்றி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
திமுக எந்த நெருக்கடியும் தரவில்லை
உதய சூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்ற திமுக எந்த நெருக்கடியும் தரவில்லை. கடந்த முறை வெற்றியை மட்டுமே நோக்காகக் கொண்டு சின்னம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
பொதுத் தொகுதியில் விசிக போட்டியிடக் கூடாதா?
நாடாளுமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதியில் விசிக போட்டியிடக் கூடாதா என்ன? நாங்களும் ஓர் அரசியல் கட்சிதான். 2001-ல் இருந்தே பொதுத் தொகுதியில் நிற்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.’’
இவ்வாறு திருமாவளவன் அறிவித்தார்.