பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மர்ம பொருள்- சீர்காழி அருகே பரபரப்பு
சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் டிவைஸ் கருவி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து செயலிழக்க வைத்தனர்.
சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் டிவைஸ் கருவி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கடலோர பகுதிகளில் அவ்வப்போது ஏதேனும் ஒரு மர்ம பொருட்கள் கரை ஒதுங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக சில பொருட்கள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களாக இருப்பதால், இது போன்ற பொருட்கள் ஒதுங்கும் போதெல்லாம் கடற்கரை பகுதியில் பெரும் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த பிப்ரவரி 12 -ம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. சுமார் ஒன்றை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதனை கண்ட மீனவர் கிராம மக்கள் அது வெடிக்கக் கூடிய தன்மை உடைய பொருளாக இருக்க கூடும் என அச்சமடைந்தனர். மேலும், இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.
நாயக்கர் குப்பம் மீனவர்களின் தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு போலீசார், மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். மேலும் இது கப்பல்களில் சிக்னலுக்காக வெடிக்க பயன்படுத்தும் வானவெடி குண்டு என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து வெடிபொருட்கள் கண்டறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது வெடிக்கும் தன்னை கொண்ட பொருள்தான் என்பதை முதலில் உறுதி செய்தனர். அதனால் இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பெயரில் சென்னையில் இருந்து வருகை தந்த நிபுணர்கள் குழுவினர். அதனை பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயல் இழக்க செய்தனர். முன்னதாக புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Farmers Protest: போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி - ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு..