காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
அரசு பள்ளியில் படித்து, அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி சுதா பேச்சியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா காமராஜர் தந்த இலவச கல்வி மற்றும் மதிய உணவை உண்டு அரசு பள்ளியில் படித்து, தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
அதனைத் தொடர்ந்து திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்கள் தேர்வை துவங்கினர். மேலும் இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து பணி ஆணையினை வழங்கினர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்
இம்முகாமில் 18 வயது முதல் 35 வரை உள்ள 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் (மாற்றுத்திறனாளிகள்) உட்பட 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 350-க்கும் மேற்பட்ட நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 60-க்கும் மேற்பட்ட நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா
முன்னதாக நிகழ்ச்சி துவக்க நிகழ்வில் பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பேசுகையில்; கல்விக்கண் திறந்த காமராஜர் கொடுத்த கல்வியால் தான் இன்று நான் அரசுப் பள்ளியில் படித்து, அவர் வழங்கிய மதிய உணவை சாப்பிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கிறேன். கடந்த 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆண்டிற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தருவேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது, பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் 20 கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும், ஆனால் 12 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இதுவே மத்திய அரசின் சாதனை எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி சங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், நகர்மன்ற குழு உறுப்பினர் கீதா, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் மகேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுரேஷ், குமாரசாமி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் குணசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.