முதல்வர் திறந்து வைத்த விழாவிற்கு வராத அதிகாரிகள்: வெறிச்சோடிய விழா பந்தல்!
மயிலாடுதுறை அருகே ரூ.225.61 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட புறவழிச்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அரசு அதிகாரிகள் வராததால் அமைக்கப்பட்ட விழா பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும் வகையில், கும்பகோணம் முதல் சீர்காழி வரையிலான மாநில நெடுஞ்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்த பிரம்மாண்ட சாலைத் திட்டமானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தில் தொடங்கி கும்பகோணம் வரை சுமார் 36.779 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட நாள் கோரிக்கையான வைத்தீஸ்வரன் கோயில் புறவழிச்சாலைத் திட்டமும் இதனுள் அடங்கும். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.225.61 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இன்று முறைப்படி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத்துவம்
கும்பகோணம் - சீர்காழி இடையிலான இந்தச் சாலைப் பணி, இப்பகுதி மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்தது. மொத்தம் 36.779 கிலோமீட்டர் தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 225.61 கோடி நிதி ஒதுக்கீட்டில் உயர்தரமான தார்ச் சாலைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையின் மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பொருட்கள் மற்றும் வணிகப் பரிமாற்றங்களுக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
அதிகாரிகளின் வருகையின்மையால் வெறிச்சோடிய பந்தல்
முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைப்பதையொட்டி, சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக ஒரு பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
இந்த அரசு விழாவில் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மிக உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விழா மேடை மற்றும் பந்தல் மிகவும் மிரமாண்டமாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், எதிர்பாராத விதமாக அறிவிக்கப்பட்ட உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் யாரும் இந்த நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
முதலமைச்சர் காணொலி வாயிலாகச் சாலையைத் திறந்து வைத்த பிறகும், விழா பந்தலில் போடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தன. முதலமைச்சரின் தொடக்க நிகழ்விற்குப் பிறகு, அங்கிருந்த நெடுஞ்சாலைத் துறை சார்ந்த கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் குத்துவிளக்கேற்றி விழாவினை நிறைவு செய்தனர். முக்கிய அதிகாரிகள் வருகை தராததால் விழாப் பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், யாரும் கலந்து கொள்ளாத விழாவிற்கு செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீன் அடித்து அந்த சுமையினை மக்கள் தலையில் கட்டுவதே வேலையாக உள்ளதாக அதனை கண்ட பொதுமக்கள் புலம்பி சென்றனர்.
இதே நாளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற வேறு நிகழ்வுகளில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்ட நிலையில் இந்த நிகழ்வில் ஒருவரும் கலந்து கொள்ளாதது குறிப்பிட்ட தக்கது.
























