"திரும்ப வந்துட்டேனு சொல்லு" - ஓய்வுக்கு பிறகு வந்த டிஎஸ்பி - மீண்டும் மயிலாடுதுறையில் அதிரடி...!
வெளிமாநில மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை குறித்து புகார் மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனை, அரசு அனுமதி இன்று செயல்பட மதுபான பார்களுக்கு சீல் என பொறுப்பேற்ற முதல் நாள்முதல் அதிரடி காட்டினார்.
நீண்ட விடுப்பில் சென்ற டிஎஸ்பி
இந்நிலையில் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நீண்ட மருத்துவிடுப்பில் சென்றார். அவரின் அதிரடி நடவடிக்கைகளால் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக பரவலாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டடது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுப்பட்டுவந்தவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் விடுப்பு முடிந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனைக்கு எதிராக தனது அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளார். அதன் ஒன்றாக முதல்நாளே கஞ்சா மற்றும் வெளிமாநில மது விற்பனை தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளார்.
எஸ்.பி.உத்தரவு
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரரேசன் தலைமையில் நடத்தினார். இக்கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பழனிவேலு கலந்து கொண்டார்.
டிஎஸ்பி தலைமையில் கூட்டம்
தொடரும் அக்கூகூட்டத்தில் டிஎஸ்பி சுந்தரரேசன் பேசுகையில்; டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை கடை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்யவேண்டும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் கடைகளை திறந்திருக்க வேண்டும், பார் உரிமையாளர்கள் உரிய உரிமம் பெற்றே பார்களை நடத்த வேண்டும், அரசு அனுதியில்லாமல் செயல்படும் பார்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் அளிக்க பிரத்யேக எண்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் 9498158885 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், உதவி மேலாளர் ஜெயபாலன், கோட்ட கலால் அலுவலர் சுகுமாறன், மதுவிலக்கு ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?
காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி
அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.