பெயர்ச்சி அடைந்தார் கேது பகவான்! கேது பகவான் ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு...!
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கேது பகவானை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில். கேது பகவான் கோயில் ( ஸ்தலம்) என அழைக்கப்படும் இந்த கோயிலில் சவுந்தரநாயகி அம்மனுடன் நாகநாதர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராகு - கேதுக்கள் தோஷ பரிகாரம் செய்யும் ஆலயமாகவும் வாசுகி பாம்பு வழிபாடு செய்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.

கேது ஸ்தலத்தில் பெயர்ச்சி விழா
பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார். இவர் மனக்கோளாறு, தோல்வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர். கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ள இந்த கோயிலில் கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேது பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கிரக பெயர்ச்சிகள்
2025 -ஆம் ஆண்டு ராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 -ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். 2025 -ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே இந்துக்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு - கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம்.

ராகு சுப, அசுப இரு பலன்கள்
காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு. ராகு கிரகம் யோககாரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.

ராகு -கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி
கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடைவதே கேது பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு ராசிக்கு 3,6,11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது சோதிட ரீதியான காரணமாகும்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு யாகம்
தற்போது மீன ராசியில் இருக்கும் ராகு கும்பத்திற்கும், கன்னி ராசியில் இருக்கும் கேது சிம்ம ராசிக்கு 2025 ஏப்ரல் 26 -ம் தேதி பெயர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வரை அந்த ராசியில் இருப்பர்கள். இந்நிலையில் இன்று கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில் நேற்று மாலை முதல் சிறப்பு யாகம், தீபாராதனை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் தலைமை குருக்கள் கல்யாணசுந்தரம் முன்னிலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை
முன்னதாக கேது பகவானுக்கு பால், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகமும், பின்னர் மலர் அலங்காரமும் செய்யபட்டு மதியம் 4.20 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கேது ஸ்தமான கீழப்பெரும்பள்ளம் கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்பரசன் செய்திருந்தார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






















