“வேண்டும் மோடி, மீண்டும் மோடி” வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில் முழக்கங்களை எழுப்பிய பாஜகவினர்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் பாஜகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று டிசம்பர் 25 -ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1924-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், 2018 -ஆம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். அவர் ஒரு இந்தி கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் நட்சத்திர பேச்சாளராக ஜொலித்தார். ஜனசங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் வாஜ்பாய் என்றே கூறலாம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 டிசம்பர் 25 அன்று பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை குவாலியர் சமஸ்தானத்தில் ஆசிரியராக இருந்தார். அடல் பிஹாரி வாஜ்யாய் தனது இளங்கலை பட்டத்தை குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் (தற்போது லட்சுமிபாய் கல்லூரி) படித்தார். மாணவப் பருவத்தில் இருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தன்னார்வத் தொண்டராக இருந்து வந்தார். அன்றிலிருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றார். இதற்குப் பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் எம்ஏ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு, கான்பூரில் இருந்தபடியே எல்எல்பி படித்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். 1968 முதல் 1973 வரை ஜனசங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து வந்தார். அப்போது, கடந்த 1952 -ம் ஆண்டு வாஜ்பாய் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர் தோல்வியை மட்டுமே சந்தித்தார். இதற்குப் பிறகு, 1957 -ம் ஆண்டு உ.பி.யின் பல்ராம்பூர் தொகுதியில் ஜனசங்க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 முதல் 1977 வரை ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகள் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக இருந்தார். 1977 முதல் 1979 வரை மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இவர், வெளிநாடுகளில் இந்தியா என்ற பெயரை உலக நாடுகளுக்கு பிரபலப்படுத்தினார். அதன்பிறகு, கடந்த 1980ம் ஆண்டு ஜனதா கட்சி மீது அதிருப்தி அடைந்த வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியை நிறுவ உதவினார்.
இதற்குப் பிறகு, அவர் ஏப்ரல் 6, 1980 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் ஆனார். அதன்பிறகு இரண்டு முறை மக்களவை தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு முதன்முறையாக நாட்டின் பிரதமரானார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது எம்பிக்களின் எண்ணிக்கை அதிகளவில் இல்லாததால், பதவியேற்று வெறும் 13 நாட்களில் இந்த அரசு கவிழ்ந்தது. கடந்த 1998 -ம் ஆண்டு வாஜ்பாய் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமரானார். அப்போது சரியாக 13 மாதங்களுக்குப் பிறகு, 1999 இன் தொடக்கத்தில், அவர் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் வீழ்ந்தது. 1999 -ஆம் ஆண்டிலேயே, வாஜ்பாய் தலைமையில் 13 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது அவரது தலைமையிலான அரசு ஐந்தாண்டு பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடித்தது.
இதையடுத்து, 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் என்ற பெருமையை பெற்றது. கடந்த 2009 -ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து நட்சத்திர பேச்சாளராக பார்க்கப்பட்டவருக்கு பேச முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 11 ம் தேதி சிறுநீரக தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 16, 2018 ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா பாஜக சார்பில் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
நகரத்தலைவர் வினோத் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாயி உருவப்படத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிறைவாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, வேண்டும் மோடி, மீண்டும் மோடி என முழக்கங்களை எழுப்பினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

