தமிழகத்திற்கு தேவையான எரிவாயு அபரிமிதமான அளவிற்கு இங்கே உள்ளது - காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
மயிலாடுதுறை அடியாமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஓன்ஜிசியின் புதிய கிணறுகள் அமைப்பதற்கோ, நீரியல் விரிசல்முறை, சைடு ட்ராக்கிங் முறை செய்வதற்கு சாத்தியமில்லை என காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன் தெரிவித்துள்ளார்.
1998 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறு
மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் பகுதியில் 1998 -ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எரிவாயு கிணறு அமைத்தது. தொடர்ந்து இரண்டாவது கிணறும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்த கிணறுகளில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒஎன்ஜிசி நிறுவனம் நீறியல் விரிசல் முறையை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடுவதாக குற்றம்சாட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அந்த கிணறுகளை கைவிடுவதாக ஒஎன்ஜிசி தெரிவித்தது.
8 எண்ணெய் கிணறுகளில் ஒஎன்ஜிசி மராமத்து பணி
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 8 ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மராமத்து பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடியாமங்கலத்தில் கடந்த 2015 -ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்தினை ஒஎன்ஜிசி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுத்தம் செய்தது. இதில் சைடுடிராக்கிங் முறையில் 3 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு ஒஎன்ஜிசி துரப்பணம் செய்ய உள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டுமென்றும், மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு போராட்டம் நடத்தபோவதாக கூறியது.
அமைதி பேச்சுவார்த்தை
அதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. எண்ணெய் கிணறு உள்ள பகுதியினை பார்வையிட்டு தங்கள் முடிவை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் அவரது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓன்ஜிசி அதிகாரிகள் எரிவாயு கசிவு வால்வு பகுதியை சரிசெய்து நிரந்தரமாக 2 எண்ணெய் கிணறுகளையும் மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விளக்கமளித்து புதிய பணிகளை செய்யவில்லை என்று வாக்குறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஒஎன்ஜிசி இரண்டு நாள் செய்யும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன் கூறுகையில், உற்பத்தி நின்றுபோன கிணறுகள் படிப்படியாக மூடப்பட்டு இடத்தை விவசாயிகளிடம் ஒப்படைத்து வருவதாகவும், தமிழகத்தில் பாதுகாப்பு வேளாண்மண்டலம் அறிவிக்கப்பட்டபின் துரப்பண பணிகள் கிடையாது என்பதால், துரப்பண ரிக்குகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டது, ஒன்று மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது என கூறிய மாறன், இனி தமிழகத்தில் ஓன்ஜிசியின் புதிய கிணறுகள் அமைப்பதற்கோ, நீரியல் விரிசல்முறை, சைடு ட்ராக்கிங் முறை செய்வதற்கு சாத்தியமில்லை என்றார்.
தமிழகத்தில் அபரிமிதமான எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான சாத்தியங்கள் இருக்கிறது. மேலும் இருக்கின்ற கிணறுகளில் தொடர்ந்து எரிவாயுவை எடுத்தால் மட்டும் தான் நாட்டின் இறக்குமதி சுமை குறையும், தமிழகத்திற்கு தேவையான மொத்த எரிவாயும் இங்கேயே இருக்கும் போது அவற்றை உபயோகப்படுத்தாமல் மூடி வைப்பதால், வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும், அவ்வாறு செய்தால் அதனால் ஏற்படும் சுமை ஏதோவொரு வடிவில் மக்களை தான் சென்றடையும் என தெரிவித்தார்