கோடை விடுமுறை எதிரொலி திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை..
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள், புதிய சாலைகள் ஆகியவற்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதே போல மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகளும் இயங்கி வருகிறது. பயணிகளின் வசதிகளுக்காக பெரும்பாலான பகுதிகளில் உள்ள ரயில் சேவைகளில் அவ்வாப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை மற்றும் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் காலத்தையொட்டி பொதுமக்கள் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
(வண்டி எண் -06322) திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வருகிறது. பின்னர் 7.40 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
இந்த ரயில் அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாததூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, நாரைக்கிணறு, நெல்லை சந்திப்பு, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.
இதேபோல் மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை-வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-நாகர்கோவில்(வண்டி எண்.16322) ரயில் வருகிற 31-ந்தேதி வரை கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். என திண்டுக்கல் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.





















