DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குரல் அதிகம் எழுந்து வரும் நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற மெசேஜை கூட்டணி கட்சிகளுக்கு அனுப்பி விட்டு கதவை இழுத்து மூடியிருக்கிறது திமுக. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இதை பற்றி பேசி வரும் நேரத்தில் தன்னை சந்திக்க வந்த ப.சிதம்பரத்திடம் முக்கியமான விஷயங்களை முதலமைச்சர் பேசியதாக சொல்கின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது கூட்டணிக்குள் சலசலப்பை கொண்டு வந்துள்ளது. தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் எங்களுடன் வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என பற்றவைத்தார். அன்றைய நாளில் இருந்து திமுக கூட்டணி கட்சிகளும் அதையே கையில் எடுத்து கொண்டன.
முதல் ஆளாக விசிகவில் இருந்து அந்த கோரிக்கை வந்தாலும் ஆட்சியில் பங்கு என்று பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று அந்த நகர்வில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் திருமாவளவன். அடுத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக பேச ஆரம்பித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் என சொல்லி புயலை கிளப்பினார். அவரது கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆமோதித்தார். அந்த வரிகளை மட்டும் எடுத்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி இடதுசாரிகளும் இதே மாதிரியான பாணியை கையாள தொடங்கியிருக்கும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது திமுக தலைமை.
ஆட்சியில் பங்கு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை கள நிலவரத்தோடு தன்னுடைய தோழமை கட்சிகளுக்கு எடுத்துச் சொல்லியிருக்கும் திமுக, அந்த முழக்கத்தை கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளதாக சொல்கின்றனர். அதோடு, மீண்டும் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கும் நிலையில், இப்படியான பேச்சுக்கள் கூட்டணியில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் எனவும் தன்னுடைய கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கூட்டணி தொடர்பான விமர்சனத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் இதையெல்லாம் கணக்கிட்ட திமுக தலைமை, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிகள் குறித்து பேசிக்கொள்ளலாம் என்று சொன்னதாக தெரிகிறது.
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்திடமும் இது குறித்து முதல்வர் விரிவாக பேசியதாகவும், அதனை ஏற்றுக்கொண்ட ப.சிதம்பரமும், தேசிய தலைமையிடம் இது குறித்து தெரிவிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது





















