PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Pongal Parisu Token 2026: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு டோக்கன் அச்சிடப்பட்டு விநியோகிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும். எனவே இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64ஆயிரம் பேருக்கு சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பாக ரொக்கப்பணமும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு- சுற்றறிக்கை
ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே தற்போது வரை பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு மட்டும் வழங்கபட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி வருகிற 3 அல்லது 4 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
வீடு வீடாக டோக்கன்
- நியாயவிலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப 02.01.2026-க்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்குச் சுழற்சி முறையில் (STAGGERING SYSTEM) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்
- முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
- இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்
ரேஷன்கடைகளில் பாதுகாப்பு
- பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை பணியாளர்களால் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும்.
- 1500 குடும்ப அட்டைகளுக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளில் இரண்டு பணியாளர்களும், 1500-க்கும் மேல் குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக்கடைகளில் மூன்று பணியாளர்களும் முன் கூட்டியே நியமனம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய நியாயவிலைக்கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக் கூடிய நியாயவிலைக்கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளைத் தொய்வின்றி செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்துமாறு அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















