Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2025-ம் ஆண்டின் கடைசி நாளில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு பாரம்பரிய உரையில், உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் முயற்சி என்னவாகும்.?

புத்தாண்டிற்கு முன்தினம், ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், உக்ரைனுடன் நடந்து வரும் போர் குறித்து பேசிய அவர், ரஷ்யா, உக்ரைனில் நடக்கும் போரில் வெற்றி பெறும் என்று நம்புவதாகக் கூறினார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதினின் பாரம்பரிய உரை, முதலில் தொலைதூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. ரஷ்யாவில் இங்குதான் புத்தாண்டு முதலில் கொண்டாடப்படுகிறது.
26 ஆண்டுகளாக ரஷ்யாவின் அதிகாரத்தில் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிசம்பர் 31 மிகவும் சிறப்பானது. இது அவர் அதிகாரத்தில் நுழைந்த 26-வது ஆண்டு நிறைவாகும். போரிஸ் யெல்ட்சின் பதவி விலகிய பிறகு, புதின் 1999-ம் ஆண்டு புத்தாண்டிற்கு முன்தினம் ரஷ்யாவின் அதிபரானார்.
“எங்கள் வெற்றி மீது நம்பிக்கை உள்ளது, ராணுவத்தை ஆதரிக்க வேண்டும்“
இன்று வெளியான தகவலின்படி, புதின் தனது உரையில், ரஷ்யர்களிடம், 'உங்கள் மீதும் எங்கள் வெற்றி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நமது ராணுவ வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. புதின் உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவர், 'முழு ரஷ்யாவின் லட்சக்கணக்கான மக்களும், என்னை நம்புங்கள், நாங்கள் உங்களைப் பற்றி சிந்திக்கிறோம்' என்றார்.
நாடு முழுவதும் தொலைக்காட்சியில் உரை ஒளிபரப்பப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும், ரஷ்யாவின் அதிபர் புத்தாண்டிற்கு முன்தினம் நாட்டு மக்களுக்கு ஒரு உரையை பகிர்ந்து கொள்கிறார். இந்த உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த பாரம்பரியத்தை, சோவியத் தலைவர் லியோனிட் பிரெஷ்னேவ் தொடங்கினார். இது லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. இது நள்ளிரவுக்கு சற்று முன்பு, அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
கேள்விக்குறியாகும் ட்ரம்ப்பின் முயற்சி
புத்தாண்டு உரையில், உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனென்றால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த போரை நிறுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில், புதினின் இந்த பேச்சு, அதற்கு நேர் மாறாக உள்ளது. தனது வீட்டின் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்ட நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், புதினுடன் பேசிய ட்ரம்ப், உக்ரைனுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், புதின் தற்போது பேசியுள்ளதை பார்த்தால், இந்த போர் இப்போதைக்கு ஓயுமா என் கேள்வியே எழுகிறது.
2022 முதல் தொடரும் ரஷ்ய-உக்ரைன் போர்
ரஷ்யா, கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி அன்று உக்ரைன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆரம்ப தாக்குதலுக்குப் பிறகு, இந்த போர் வலி, அழிவு மற்றும் ரத்தக் களரியால் நிரம்பிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.




















