Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் வடமாநில இளைஞரை கொடூரமாக வெட்டி அதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் மோகத்தால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பகீர் சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். டிசம்ம்பர் 27ம் தேதி சென்னை- திருத்தணி ரயிலில் சுராஜ் பயணம் செய்யும் போது 17 வயதுடைய இளைஞர்கள் 4 பேர் கஞ்சா போதையில் ரயிலில் ஏறியுள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக 2 பட்டா கத்தியை அவர்கள் கையோடு எடுத்து வந்துள்ளனர்.
சுராஜை பார்த்ததும் ஹிந்தியில் பேசி வம்பிழுத்த கும்பல் அவரை வெட்டுவது போல் நடித்து ரீல்ஸ்-ம் எடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமான கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தை அடைந்ததும் சுராஜை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு வைத்து பட்டா கத்தியால் வடமாநில நபரை கடுமையாக வெட்டியுள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து கஞ்சா போதையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வடமாநில நபர் தட்டுத்தடுமாறி மெயின் ரோட்டுக்கு சென்று மற்றவர்களின் உதவியை கேட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனை தொடர்ந்து வேறு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 சிறுவர்களை பிடித்த போலீசார், கொலை முயற்சி வழக்கு , பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துதல் , உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பட்டப் பகலிலேயே வடமாநில நபர் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





















