திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
தங்களது உயிரை தற்காத்துக்கொள்வதற்காக, உதவி ஆய்வாளர் பாஸ்கர் முதலில் ராஜசேகரின் இடது கால் தொடையிலும், பின்னர் இடது விலாவிலும் துப்பாக்கியால் சுட்டார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையனை கோவை தனிப்படை போலீசார் இன்று திருச்சியில் சுட்டுப் பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (32). இவர், திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலையத்தில் சந்தேக, சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரை கைது செய்ய தொடர்ந்து பல்வேறு மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல் ஆணையரின் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், ராஜசேகரை தேடி திருச்சி வந்தனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ராஜசேகரை இன்று காலை கோவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பிடிபடாத ராஜசேகர், தனிப்படையினரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.
ஆனால், அதை பொருட்படுத்தாது ராஜசேகரை பிடிக்க முயன்ற தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்கர், முதல்நிலை காவலர் கண்ணன் ஆகியோரை ராஜசேகர் அடுத்தடுத்து அரிவாளால் வெட்டினார். இதனால், தங்களது உயிரை தற்காத்துக்கொள்வதற்காக, உதவி ஆய்வாளர் பாஸ்கர் முதலில் ராஜசேகரின் இடது கால் தொடையிலும், பின்னர் இடது விலாவிலும் துப்பாக்கியால் சுட்டார்.

இது குறித்து தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர், முதல்நிலை காவலர் கண்ணன் மற்றும் கொள்ளையன் ராஜசேகர் மூவரையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர் என்று, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை தனிப்படை போலீசாரை கொல்ல முயன்ற பிரபல கொள்ளையன், திருச்சியில் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















