தேனியில் கொரோனா பரிசோதனை செய்தால் மரக்கன்றுகள் இலவசம்...!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுழைவு வாயிலில் உள்ள காவல் நிலைய சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா இரண்டாம் அலை குறைந்து வந்தாலும், தேனி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள மாநிலமான கேரள மாநிலத்தில் அதிவேகமாக கொரோனோ தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. கேரள அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறினால் அங்கு அதிக அளவிலான பாதிப்புகள் பதிவாகி கொண்டே உள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் புதியதாக நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு 12 வயது சிறுவனின் உயிர் பறி போனதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கும் மதுரை மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் தினமும் சென்று வருகிறார்கள்.
அதேபோல் மதுரையிலிருந்து ஆண்டிபட்டி, தேனி, கம்பம் போடி மெட்டு, குமுளி வழியாக கேரள மாநிலத்திற்கும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் போது, கேரள மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், RTPCR சான்றிதழ்களும் கொரோனாவிற்கான தடுப்பூசி 2 டோஸ் போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திலிருந்து நிபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ், தேனி மாவட்டத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக தேனி , மதுரை மாவட்டங்களின் இடையே உள்ள கணவாய் பகுதியில், எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் சார்பாக, காவல்துறை சோதனைச்சாவடி அருகே புதியதாக ஒரு தனி முகாமை அமைத்து கேரள மாநிலத்திற்கு செல்லும் மக்களுக்கும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களுக்கும் கொரோனோ தொற்று உள்ளதா என்ற சோதனையை நடத்தி வருகிறார்கள்.
எல்லையில் கொரோனா தொற்று சோதனைக்கு அஞ்சாமல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கும் மக்களுக்கும், சோதனை மேற்கொள்பவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மக்களைத் தேடி மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தேசிய குழந்தைகள் நலதிட்ட மருந்தாளுனர் ரஞ்சித்குமார் சார்பில் இலவசமாக முகக்கவசங்களும், கற்றாழை, ஆர்.எஸ்.பதி, கரிசலாங்கண்ணி, கருந்துளசி, கற்பூரஇலை, ஆடாதொடை, தூதுவளை, உள்ளிட்ட மரக்கன்றுகளும், கிருமிநாசினி பாட்டில்களும் வழங்கப்படுகிறது. எல்லையில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு மூலிகைச் செடிகள் வழங்குவது தேனி மாவட்டத்தில் புதியதாக உள்ளதாகவும்,
இந்தச் செடிகளை வீட்டில் வளர்க்கும் போது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் எனவும், குரான் ஓதுவதற்கான பரிசோதனை செய்துகொண்டு மூலிகைச் செடியை வாங்கி சென்றவர்கள் கூறினர். தேசிய குழந்தைகள் நலதிட்ட மருந்தாளுனர் ரஞ்சித்குமார் சார்பில் இதுவரையிலும் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சேவைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனோ பரிசோதனை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக முககவசம், கிருமிநாசினி, மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்படுவது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற