பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
கடந்த 2025ஆம் ஆண்டில் 3.53 கோடிப் பேர் விண்ணப்பித்து, கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4,05,81,955 பேர் பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கலந்துரையாடும் 'பரீட்சா பே சர்ச்சா' (PPC 2026) நிகழ்ச்சியின் 9-வது பதிப்பு, முந்தைய ஆண்டுகளின் சாதனைகளை முறியடித்துப் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் 3.53 கோடிப் பேர் விண்ணப்பித்து, கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4,05,81,955 பேர் பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 4.05 கோடி பதிவுகளில் சுமார் 3,77,51,681 மாணவர்கள், 23,00,231 ஆசிரியர்கள் மற்றும் 5,30,043 பெற்றோர்கள் ஆவர். இந்த ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மாணவர்களின் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, மன அழுத்தமில்லாமல் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். பதிவு செய்யும் அனைவருக்கும் 'பங்கேற்புச் சான்றிதழ்' வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் 'MyGov' இணையதளம் வாயிலாகச் சுயமாகவோ அல்லது தங்களது ஆசிரியர்கள் மூலமாகவோ வரும் ஜனவரி 11, 2026 வரை பதிவு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு விண்ணப்பித்துள்ள பங்கேற்பாளர்கள் 'கொள்குறி வகை வினா' (MCQ) போட்டித் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களது கேள்விகளைப் பிரதமரிடம் நேரடியாகக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தேர்வு செய்யப்படும் நபர்களிடம் இருந்து கேள்விகளைக் கேட்கவும், அவர்களின் அனுபவங்களை அறியவும் ஆவலாக இருக்கிறேன். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்து நாம் விவாதிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி
ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லி டால்கடோரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி முதன்முதலில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு தேசிய அளவிலான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம், மாணவர்கள் நேரடியாகச் சந்தித்து தங்களின் கேள்விகளைக் கேட்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 11 கடைசித் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.






















