மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம் அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம் அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ பெரியசாமி பேசும்போது,100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாளாக மத்திய அரசு அதிகரித்துள்ளனர். நான் அமைச்சராக பொறுப்பேற்று 2023 - 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம் அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேர்களுக்கு தான் வேலை கொடுப்போம் என கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு தான் கொடுப்போம் என கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளை பறிக்க நினைக்கின்றனர்.
சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சமத்துவ சமுதாயம் இருக்க வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, நாம் அனைவரும் ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமை பறிக்கக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தனிமனித உரிமைகள் பறிக்கப்படக்கூடாது. சேர வேண்டியவர்களுக்கு எல்லாம் சேர வேண்டும் அதில் பாகுபாடு, புறக்கணிப்பு இருக்கக்கூடாது. முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன். உங்கள் உரிமை உங்கள் கையில் உள்ளது அதனை யாரும் தட்டி பறிக்க முடியாது.
மக்கள் இல்லை என்றால் ஆட்சி கிடையாது. பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும். மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளை சொல்வார்கள். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சர் இடம் பேசி உள்ளேன். அதையும் செய்வோம் என கூறியுள்ளார்.





















