Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Auspicious Time: தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நாளில் பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையும், தமிழர்களின் அடையாளமாகவும் இருப்பது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை என்றாலே மொத்த தமிழ்நாடும் களைகட்டும். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?
தமிழர் திருநாள், தைத் திருநாள், அறுவடை நாள் என்று சாதி, மத பேதமின்றி விவசாயிகளை போற்றும் பண்டிகையாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகை நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை கீழே விரிவாக காணலாம்.
பொதுவாக, எந்தவொரு நல்ல காரியத்தையும் ராகு காலம், எமகண்டம் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலே செய்ய வேண்டும்.
பொங்கல் திருநாள்: 15.01.2026
தைத் திருநாளான பொங்கல் நாளில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நல்ல நேரம். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறப்பாகும். இல்லாவிட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கினால் மிகவும் சிறப்பாகும்.
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை ராகு காலம். மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம். இந்த நேரத்தில் கட்டாயம் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல்: 16.01.2026
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் பண்டிகையே கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலான வரும் 16ம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 10.3 மணி வரை நல்ல நேரம் ஆகும். மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது மிகவும் சிறப்பாகும்.
ராகு காலம் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வருகிறது. எமகண்டம் மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக பொங்கல் பண்டிகை நாட்களில் மதியம் 1 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது ஆகும்.
சூரிய பொங்கல்:
தை முதல் நாள் விவசாயிகளுக்கும், உழவுக்கும் அடிப்படையான சூரியனை போற்றும் வகையில் சூரிய பகவானை வணங்கி சூரிய பொங்கலாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். இது விவசாயத்திற்கும், விளை நிலத்திற்கும், உணவு தரும் சூரியனுக்கும் செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது.
கால்நடைகளுக்கான வழிபாடு:
அதேபோல, அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் இந்த விவசாயத்திற்கு உற்ற துணையாக நிற்கும் மாடுகளைப் போற்றும் விதமாக வழிபடப்படுகிறது. தற்போது விவசாயத்திற்கு டிராக்டர் போன்ற கருவிகள் வந்தாலும் பல நூறு ஆண்டுகளாக மாடுகளை கொண்டே மனிதர்கள் நிலத்தை உழுதனர். மேலும், கால்நடைகள் மூலமாகவும் மனிதர்களின் பொருளாதாரமும் உயர்கிறது. இதைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல் காெண்டாடப்படுகிறது.





















