Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
ராகுல்காந்தி சொல்லி தான் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தாரா என்பது தொடர்பாக சில உண்மைகளை உடைத்துள்ளார் க்ரிஷ் சோடங்கர். 2026 தேர்தலில் 41 தொகுதிகளை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக எதிர் தரப்பினர் மத்தியில் விமர்சனம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகராக அறியப்படும் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பரபரப்பை கிளப்பினார். அதோடு இல்லாமல் திமுக தலைமையிலான அரசுக்கு எதிரான கருத்துகளையும் நேரடியாக தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் ராகுல்காந்தி அல்லது காங்கிரஸ் தலைமை சொல்லி தான் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘மாநில அளவிலான பிரச்னைகளில் ஏன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே பெயரை இழுக்கிறீர்கள் என தெரியவில்லை. பிரவீன் சக்கரவர்த்தியும் சினிமா வட்டாரத்தில் இருப்பதால் படம் சம்பந்தமாக விஜய்யை சந்தித்திருக்கலாம். பிசினஸ் பேசுவதற்காக சந்தித்தார்களா அல்லது சாதாரணமாக சந்தித்தார்களா என கடவுளுக்கு தான் தெரியும். 2 பேர் சந்தித்தால் அரசியல் மட்டும் தான் பேச வேண்டுமா? திமுகவுக்கு இதில் எந்த பிரச்னையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸை சேர்ந்த சிலர் விஜய்யுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்து சரியானது தான் என்று க்ரிஷ் சோடங்கரும் ஆமோதித்துள்ளார். மேலும் 41 இடங்களுக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது தொடர்பாகவும் க்ரிஷ் சோடங்கள் முக்கிய விவரங்களை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சீட் என கணக்கு வைத்து 38 இடங்களுக்கு டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே போட்டியிட்ட 41 தொகுதிகளை மீண்டும் கேட்கலாம் என்ற முடிவிலும் காங்கிரஸ் இருப்பதாக சொல்கின்றனர்.
கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு முன்பு 2016 தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு 4 தொகுதிகள் கிடைத்தது. அதனால் வரும் தேர்தலிலும் அதிகமான தொகுதிகளை கேட்கலாம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். இந்த முறை புதிய அணியாக விஜய்யும் களத்தில் உள்ளதால் அதனை வைத்து அதிக சீட் டிமாண்ட் செய்வதற்கு சில கட்சிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என போர்க்கொடி தூக்கிவரும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் க்ரிஷ் சோடங்கரின் பேட்டியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.





















