அணையில் வீசிய வலையில் சிக்கிய ‛மெகா’ எடை மீன்கள்!
கிலோ எடை அதிகம் கொண்ட மீன் என்பதால் மொத்தமாக வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை. இருப்பினும் மீன் வாங்குவதை விட, அதை பார்ப்பதற்கு அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் கோட்டை மேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி வரதமாநதி அணையில் சுமார் 25 கிலோ எடையுள்ள இரண்டு கட்லா மீன்கள் விற்பனைக்கு வந்ததை பலரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை என மூன்று அணைகள் மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மூன்று அணைகளிலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் மீன் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அணைக்கட்டில் கட்லா, மிருகால், ரோகு போன்ற வகை மீன்கள் வளர்க்கப்படுகிறது. இவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பிடிக்கப்பட்டு விற்பனையான நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டு மற்ற நாட்களில் மட்டும் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீன்பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் சுமார் 25 கிலோ எடையுள்ள இரு கட்லா மீன்கள் சிக்கின.
வலையை இழுக்க முயன்ற போது, வழக்கத்தை விட அதிக கனமாக இருந்ததை கண்டு சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் ஆர்வமாகினர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து இழுத்த போது, 25 கிலோ எடை கொண்ட இரு மீன்கள் இருப்பது தெரியவந்தது. உடனே வலையை கரைக்கு இழுத்து மீன்களை அதிலிருந்து எடுத்தனர்.
பின்னர் அந்த மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகளிடம் கடுமையான போட்டி இருந்தது. இறுதியில் பழனியில் பட்டத்துவிநாயகர் கோயில் அருகே கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள தனியார் மீன்கடைக்கு அந்த மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பிடிபட்ட அந்த இரு மீன்களும் காலையிலிருந்து மதியம் வரை உயிரோடு இருந்ததை கண்டு சம்மந்தப்பட்ட வியாபாரியே அதிசயத்துள்ளார். கிலோ எடை அதிகம் கொண்ட மீன் என்பதால் மொத்தமாக வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை. இருப்பினும் மீன் வாங்குவதை விட, அதை பார்ப்பதற்கு அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் கோட்டை மேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்மந்தப்பட்ட மீனை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவற்றை துண்டாக்கி பின்னர் எடைக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டது. ராட்சத கட்லா மீனை இதுவரை பார்க்காத அந்த பகுதியினர், வினோதமாக வந்த பார்த்துச் சென்றனர். பொதுவாகவே கட்லா மீனில் அதிக கழிவு இருக்கும். இந்த மீனும் சுத்தம் செய்யப்பட்ட பின் நிறைய கழிவுகள் இருந்ததாகவும், எடையில் குறிப்பிட்ட அளவை அது எடுத்துக் கொண்டதாகவும் சம்மந்தப்பட்ட மீன் வியாபாரி தெரிவித்தார். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளிலும் நல்ல நீர் வரத்து உள்ளது. இதன் காரணமாக அணைகளில் வளர்க்கப்படும் மீன்களும் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன.