2 உயிர்களை பலி வாங்கிய மகளிர் விடுதி; மதுரையில் தரைமட்டமாகப்போகும் கட்டடம்
பெண்கள் தங்கு விடுதி தீ விபத்து 2 ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலி விபத்து நடந்த கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கியது. மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்கின்றனர்.
கட்டட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்திற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணிகள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து
மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற பெயரில், தனியார் விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதில் ஆசியர்களும், அரசு தேர்வு எழுதும் பெண்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவிற்கான நச்சு கரும்புகை வெளியேறியுள்ளது.
இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம்
இதில் மதுரை இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த பரிமளா சௌத்ரி மற்றும் எட்டயபுரம் பேரிலோவன்பட்டியை சேர்ந்த அன்னம்மாள் டெக்னிகல் இன்ஸ்டியுட்டில் ஆசிரியராக பணிபுரியும் சரண்யா(27) ஆகிய இரு பெண் ஆசிரியர்களும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலயே உயரிழந்தனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்த மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த வார்டன் மற்றும் மேலளாராக இருந்து வந்த புஷ்பா (56) என்ற பெண்ணும், மேலூர் அட்டபட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற முதலாமாண்டு செவிலியர் மாணவி மற்றும் விடுதியின் சமையலறான கனி ஆகிய 3 பேரும் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற பெண்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது விபத்து நடந்த கட்டடத்திற்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு அது விடுதி உரிமையாளரிடம் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்தில் கட்டடம் முழுவதும் சேதமடைந்த்தோடு, கட்டடம் பாதுகாப்பின்றி சேதமடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தீ விபத்து நடைபெற்ற கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
கட்ராபாளையம் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு
பின்னர் நேரடியாக மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி மாலதி தலைமையிலான அதிகாரிகள் தலைமையில் சீல் அகற்றப்பட்டு கட்டடத்தின் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கட்டடத்தை இடிக்கும் பணிகளை கட்டட உரிமையாளர் தரப்பிலான பணியாளர்கள் தொடங்கினர். இதனையடுத்து கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், இடிப்பு பணி நடைபெறும் கட்ராபாளையம் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னதாக தீ விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து தீ விபத்துக்கு காரணமான பிரிட்ஜ்சில் இருந்து ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக தடயவியல் நிபுணர்கள் மாதிரி எடுத்துசென்றனர். கட்டட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்திற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணிகள் பாதுகாப்புடன் நடைபெற்றுவருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம்: பெண்கள் தங்கும் விடுதிக்கு சீல்!