மதுரையில் மாஸ் காட்டும் விஜய்; மாநாட்டு மேடை பணிகள் தீவிரம், ராம்ப் வாக் மூலம் ரசிகர்களை சந்திக்கிறார்
தமிழக வெற்றிக்கழக மாநாட்டு மேடை அமைக்கும் பணி 50 சதவீதம்நிறைவு - தொடர்ந்து ராம்ப் வாக் நடத்தும், மேடை அமைக்கும் பணி தொடக்கம்.

மதுரையில் தவெக மாநில மாநாடு
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜூலை மாதம் 16- ஆம் தேதி பந்தகால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடும் பொதுச் செயலாளர்
இந்த சூழலில் மாநாட்டின் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. ஆனால் குறிப்பிட்ட நாள் அன்று மாநாடு நடைபெறும் என தவெக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டத்தில் நடைபெறப் போகும் முதல் மாநாடு என்பதால் தவெக தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த சூழலில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் இன்று விமானம் மூலம் வந்து, அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட உள்ளார்.
ராம்ப் வாக்கில் தொண்டர்களை சந்திக்கவுள்ளார் விஜய்
தொடர்ந்து தவெக மாநாட்டு மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடையில் தற்போது பந்தல் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 50 சதவீத மேடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மாநாடு நடைபெறும் அன்று தொண்டர்களின் நடுவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ராம்ப் வாக் போல நடந்துவர உள்ளார். விஜய் வாக் ஷோவிற்காக தற்போது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





















