வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிக்கு தனது உண்டியல் பணத்தை கொடுத்த சிறுமி - மதுரையில் நெகிழ்ச்சி
தீபாவளி பண்டிகைக்காக சேர்த்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவியாக வழங்கிய 4-ஆம் வகுப்பு மாணவி - சால்வை அணிவித்து மாணவியை வாழ்த்திய மதுரை மாவட்ட ஆட்சியா்.
கேரள மாநிலம் வயநாடு
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் தென்னிந்திய மாநிலமான கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக இருக்கிறது. அந்த ஊரின் சினிமாவை தாண்டி அங்குள்ள இடங்களுக்கும் மக்களும் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. தென்மேற்கு பருவ காலம் தொடங்கிய நிலையில், மழை வெளுத்து வாங்கியது. இதனால் எதிர்பாராத விதமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்துள்ளது. 360க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.
தீபாவளிக்கு காசு
இந்நிலையில் மதுரை மாநகர் திருநகர் 5-ஆவது பேருந்து நிறுத்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துபாண்டி(37) - கார்த்திகா (37) தம்பதியினரின் மகளான 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ ஜோதிகா (8) தீபாவளி பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தினை வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாவிடம் வழங்கினார்.