Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதைப் பெறுவது எப்படி என்ரு பார்க்கலாம்.

தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
கல்வி ஒன்றே அழிக்கவோ, பறிக்கவோ முடியாத சொத்து. அத்தகைய கல்வியை மாணவர்களுக்கு அளிக்க, அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஏழ்மை நிலையில், ஆதரவற்ற நிலையில்ல் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதைப் பெறுவது எப்படி என்ரு பார்க்கலாம்.
தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியானது, ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயன் பெறுவது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்றதற்கான சான்று, போஸ்ட் மெட்ரிக் (Post Matric Scholarship) கல்வி உதவித்தொகை மற்றும் 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
அதேபோல, ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்று பயிலும் ஏழை மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 தொகைக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எனவே அதற்கான வருமானச் சான்று, மதிப்பெண் சான்று (+2), தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்கள் அவசியம்.
ஆவணங்களை சமர்ப்பிப்பது எப்படி?
மேற்படி தகுதியுள்ள மாணவர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.






















