EPS On Tn Govt: திமுக ஆட்சியில் கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
EPS On Tn Govt: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
EPS On Tn Govt: சட்ட ஒழுங்கு சீர்கெட்டால் தமிழ்நாட்டிற்கு எப்படி முதலீடுகள் வரும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.
”தொடரும் கொலைகள்”
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ளதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 4, 2024
ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா… pic.twitter.com/U1SPKIoklL
தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் எப்படி வரும்?
தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்? "தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் செய்திதாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது. சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை" என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.