கள்ளர் சீரமைப்பு விடுதிகள் தொடர்பான வழக்கு - ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த சீர்மரபினர் பழங்குடியினர் நல சங்கத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகள் உள்ளன. இவை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் நிர்வகிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கள்ளர் சீரமைப்பு விடுதிகளும் கள்ளர் சீரமைப்பு துறையால் முறையாக மேற்பார்வை செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், முறையாக நிர்வகிக்க இயலவில்லை எனக்கூறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கினை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்