மதுரையில் விவசாய பாசன கால்வாய் உடைப்பு; 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர்!
கால்வாய் உடைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை விளாச்சேரி விவசாய பாசன கால்வாய் உடைப்பு; வடிவேல்கரை ஊருக்குள் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. இதனால் பெருமளவு சேதமடைந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது. டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது.
இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது பல்வேறு இடங்கள் ஓரளவு மீண்டு வருகிறது. இந்த சூழலில் மதுரை விளாச்சேரி விவசாய பாசன கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வடிவேல்கரை ஊருக்குள் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கண்மாயிக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கம்பிக்கூடு பாசன கால்வாயில் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வடிவேல் கரை ஊருக்குள் புகுந்தது. இந்த பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் உள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதுபோன்று அடிக்கடி இந்த கால்வாய் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளதாகவும், தற்போது அதிக அளவு தண்ணீர் ஊருக்குள் வந்திருப்பதாகவும் இதனால் அப்பகுதி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
எனவே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து இதுபோன்று கால்வாய் உடைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.