”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் திமுக அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் திமுக அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என மதுரையில் செல்லூர் கே.ராஜூ பேட்டி.
சினிமாவில் எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள், சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் கரை படியாக கரத்திற்கு சொந்தக்காரர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீட்பு பணிகள் முற்றிலும் சீரடைந்து பிறகு படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் திமுக அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புத்தாடைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில் "சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4 கோடி ரூபாயில் கூட மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது. திமுக தலைமையிலான அரசு பேச்சோடு சரி, எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யவில்லை.
திமுக அரசு புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை, திமுக தலைமையிலான தமிழக அரசு திறனற்ற அரசாக உள்ளது. திமுக உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. திமுகவினர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள், அதே நேரத்தில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டுமென அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன், சினிமாவில் எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள், சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் கரை படியாக கரத்திற்கு சொந்தக்காரர் ஆவார்" என கூறினார்.