ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
கோரிக்கைகளின் முக்கியத்துவம் உணராமல், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களை உடனடியாக கழகத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் - அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம்.

ஜனவரி 6ஆம் தேதி நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் பங்கேற்கவில்லை என்றால் சங்கத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவர் என்றும் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும்
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சுரேஷ் வாட்ஸப் வழியாக வெளியிட்டுள்ள உத்தரவில், ’’ஜனவரி 6 முதல் தொடங்க இருக்கிற காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் மாநில ஆட்சிக் குழுவின் சார்பாக வழங்கப்படுகின்றன.
நமது உறுப்பினர்களாக உள்ள முதல்வர்கள், முதல்வர் கூடுதல் பொறுப்பு வகிப்பவர்கள் , புதிய கல்லூரிகள் உள்ளிட்ட பிற கல்லூரிகளில் மாற்றுப்பணியில் பணியாற்றுபவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.
எவ்வித மாற்றுப்பணியிலும் ஈடுபடக் கூடாது
ஜனவரி 6 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட எவ்வித மாற்றுப்பணியிலும் ஈடுபடக் கூடாது. ஜனவரி 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள 'நான் முதல்வன் ' FDP Programme க்கு, ஜனவரி 5 ஆம் தேதி மட்டும் மாற்றுப்பணியில் கலந்து கொண்டு, ஜனவரி 6ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.
ஜனவரி 5 ஆம் தேதி மாற்றுப்பணி செல்பவர்கள் அல்லது அன்று வரை மாற்றுப் பணியில் இருப்பவர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கல்லூரியில், பணியில் சேர வேண்டும் என்பது தேவையில்லை.
யாருக்கு விலக்கு?
2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது .
கோரிக்கைகளின் முக்கியத்துவம் உணராமல், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களை உடனடியாக கழகத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கிளைச் செயலர்களை மாநில ஆட்சிக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்’’ என்று அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.






















