Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானாவில் உள்ள ஒரு பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் பற்றிய தீயில் சிக்கி 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தில், ஸ்விட்சர்லாந்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, சொகுசு ஆல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கிரான்ஸ் மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக சுவிஸ் போலீசார் இன்று அதிகாலையில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 40 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ் மொன்டானா நகரில், பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட, 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இந்நிலையில், அந்த நாட்டின் நேரப்படி, அதிகாலை 1.30 மணி அளவில், அங்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில், இந்த வெடி விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற உறுதியான தகவலை சுவிட்சர்லாந்து போலீசார் கூறவில்லை. புத்தாண்டை ஒட்டி, பட்டாசு வெடித்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
40 பேர் உயிரிழப்பு
மேலும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மாறாக, இது ஒரு தீ விபத்து என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர். அதோடு, "பல டஜன்" பேர் இறந்திருக்கலாம் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைவர் கூறியுள்ளார்.
ஆனால், இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சுமார் 40 பேர் இறந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் சுவிஸ் காவல்துறை நம்புவதாக கூறியுள்ளது.
பாரில் குவிந்திருந்த நூற்றுக்கணக்கானோர்
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர், விடுமுறைக்காக கிரான்ஸ் மொன்டானாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் என்று நம்பப்படுகிறது. வெடி விபத்து நடந்த நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரில் இருந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், "நாங்கள் எங்கள் விசாரணையின் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். ஆனால், இது ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுவிஸ் நாளிதழ் ப்ளிக், சம்பவ இடத்தில் இருந்த ஒரு மருத்துவரை மேற்கோள் காட்டி, இறப்புகளின் எண்ணிக்கை "டஜன் கணக்கானதாக" இருக்கலாம் என்று கூறியது. பிராந்திய நாளிதழான Le Nouvelliste, "சுமார் 40 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்" என்று "பெரும் எண்ணிக்கை" இருப்பதாக அதன் ஆதாரங்கள் விவரித்ததாகக் கூறியுள்ளது.





















